2 Sept 2017

வரலாற்றில் நிறையும் மற்றும் ஒரு துளி உயிர்

வரலாற்றில் நிறையும் மற்றும் ஒரு துளி உயிர்
            ஆட்சியாளர்களின் குழறுபடிகள் மனித உயிர்களைக் குடிப்பது வரலாற்றுக்குப் புதிதல்ல. அந்த உயிர்க்குடிப்பில் மருத்துவம் படிக்க ஆவலோடு இருந்த அனிதாவும் ஒரு துளியாக நிறைந்து விட்டார்.
            நுழைவுத் தேர்வுகள் உருவாக்கும் மனஇறுக்கங்களுக்கு தமிழ்நாட்டில் போதிய மனநல மருத்துவர்கள் கிடையாது என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரியாது. நுழைவுத் தேர்வுகள் நுழைவைத் தடுக்கும் தேர்வுகளாக உருப்பெறுவது கல்வி மறுப்பின் ஒரு வகை வடிவமாகும்.
            நுழைவுத் தேர்வுகள் தேர்வு செய்யவா? மனித உயிர் குடிக்கவா? என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டிய நேரம் இது. தகுதித் தேர்வுகள் என்ற பெயரில் ஏழைகளுக்கான உயர் கல்வி மறுக்கப்படுகிறது. இதுவும் ஒருவகை வர்ணாசிரம முறையே.
            ஒவ்வொரு தகுதித் தேர்வுக்கும் உரிய வகுப்புகளுக்கு அனுப்ப எத்தனைப் பெற்றோர்களிடம் வசதி இருக்கும்?
            அதே நேரத்தில் மருத்துவம் படித்து மற்றவர்களின் உயிர்களைக் காக்க வேண்டிய ஒரு வருங்கால மருத்துவரே தற்கொலையில் மாய்வது வேதனையைத் தருகிறது. அந்த அளவுக்குப் பாடத்திட்டங்களும், நுழைவுத் தேர்வு தடைகளும் மாணவர்களின் மனநிலையைப் பலவீனமாக்கிக் கொண்டே போகிறது.
            மருத்துவம் தவிர வேறு படிப்பே இல்லை என்பது மாதிரி தமிழ் நாட்டில் நிறைய மாணவர்கள் படிக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசும் மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வுக்கென கேள்விகள் அடங்கிய வினா-விடைத் தொகுப்பை உருவாக்க முனைப்பு காட்டுகிறது. அரசின் கருத்துப்படியே பார்த்தாலும், மருத்துவம் தவிர மற்ற படிப்புகளுக்கு அப்படிப்பட்ட ஒரு வினா-விடைத் தொகுப்பு தேவையில்லையா?
            தமிழக அரசின் பாடத்திட்டம் ஒரு மாதிரியாக இருக்கிறது. மத்திய அரசின் பாடத்திட்டம் ஒரு மாதிரியாக இருக்கிறது. அடிப்படையிலே வேறுபாடு இருக்கும் போது நீட் என்பதை பொது நுழைவுத் தேர்வு என்று எப்படி ஏற்க முடியும்?
            கிராமத்திலிருந்து போய் படிக்கும் மாணவர்களே டாக்டராகி விட்டால், கிராமத்திற்கு வந்து மருத்துவம் பார்ப்பதில்லை. நிலைமை இப்படி இருக்க நீட் என்ற பெயரில் பிற மாநிலத்தவர்களை இங்கு வந்து மருத்துவம் படிக்க வைத்தால் அவர்கள் தமிழ்நாட்டில் தங்கி எப்படி மருத்துவம் பார்ப்பார்கள்?
            தமிழ்நாடு மாநிலமானது மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் ஒரு காலம் வரப் போகிறது. ஏற்கனவே நதிநீர்ப் பங்கிட்டில் உரிய நீதி கிடைக்காமல் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகிறது. அடுத்து மருத்துவப் பற்றாக்குறை!
            இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்பது போல சென்னை மாநகரம் செயல்படுகிறது. அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் படித்த மருத்துவர்கள்தானே. தகுதி வாய்ந்தவர்கள்தானே. அப்புறம் என்ன நீட் தேர்வு மூலம் தகுதி வாய்ந்த மாணவர்களை மருத்துவத்திற்கு தேர்ந்தெடுக்கப் புறப்பட்டு இருக்கிறார்கள்?
            நம்முடைய கேள்விகளும், எதிர்ப்புகளும் எந்த விதமான அசைவையும் செய்யாத ஒரு நிலப்பரப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவே மிகப்பெரிய சீக்கு. இந்தச் சீக்குக்கு என்ன மருத்துவம் செய்வது? அல்லது பரிகாரமாக அனிதா போன்ற உயிர்களைப் பலி கொடுத்து தப்பிப் பிழைத்துக் கொள்வதா?
                        இளைய தலைமுறையைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது என்று புளுவேல் என்ற விளையாட்டு தடைசெய்யப்படுகிறது. அதே போல் தற்கொலைக்குத் தூண்டும் நீட் தேர்வும் தடைசெய்யப்பட வேண்டியதுதான். தகுதி என்ற பெயரில் உயிர்களை வதைப்பது எப்படி ஒரு நுழைவுத் தேர்வாகவே இருக்க முடியும்?

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...