24 Sept 2017

அறிவுரையின் பின்னால் நிற்கும் கோபம்!

அறிவுரையின் பின்னால் நிற்கும் கோபம்!
            எஸ்.கே. மிகுந்த கோபத்தோடு காணப்பட்டான். அவனுக்கு ஏன் இவ்வளவு கோபம்? அவனைக் கோபப்படுத்துகிறார்கள்.
            அத்தோடு அவனுக்கு என்றே இருக்கும் பிரத்யேக குணங்களும் சேர்ந்து கொள்கிறது அவனது கோபத்தை மிகைப்படுத்துவது போல.
            நேரம் ஆக ஆக குறிப்பிட்ட நேரத்திற்குள் அவன் நினைத்த இலக்கை அடைய முடியாதோ என்ற சந்தேகத்தனமான இயலாமை, அதை வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் குமையும் குமைச்சல் இவைகள் எல்லாம் சேர்ந்து அவனை மேலும் கோபக்காரனமாக மாற்றுகின்றன.
            வர வர அவனைச் சுற்றி உள்ளவர்கள் விளக்கங்கள் அவனுக்குக் கொஞ்சம் கூட பொருத்தப்பாடு இல்லாமல் தோன்றுகின்றன. அந்த வாரம் அவனுக்கான முக்கிய ஏற்பாடுகள் சிலவற்றைச் செய்வதாக சொல்லி விட்டு, பின் அவைகளை ஒவ்வாத காரணங்களை முன் வைத்துத் தள்ளிப் போடுகிறார்கள்.
            அவைகளையெல்லாம் எஸ்.கே.வால் புரிந்து கொள்ள முடியவில்லை. போர்க்கால அவசரத்தோடு அவனது தேவைகளை நிறைவேற்றுவதாக கடைசியாக வாக்களிக்கிறார்கள். கடைசியில் அதுவும் அம்போவாகிறது.
            அவரவர்களுக்கு அவரவர் மனநிலை ஒரு கம்போர்ட் ஸோன் மாதிரி. அதை விட்டு அவர்களால் எப்படி வெளிவர முடியும்? அது குறித்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களால் தாங்க முடியாது. கேட்பவர்களிடம் எரிந்து விழுவாரகள் அல்லது பகை கொள்வார்கள்.
            இது குறித்து எஸ்.கே. பலரிடம் அறிவுரைக் கூறிக் கொண்டு இருக்கிறான். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
            எந்த அறிவுரையையாவது யாராவது கேட்கிறார்களா? அவர்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ, அப்படித்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
            வாழ்வில் மிக முக்கியமான கட்டங்களில் கூட யாரும் யாரும் அறிவுரைகளை ஏற்றுச் செயல்படுவதில்லை. மனதில் படுபவைகளைத்தான் ஏற்றுச் செயல்படுகிறார்கள்.
            யாராலும் அப்படியே அறிவுரைப்படி செயல்பட முடியாது. தனக்குத் தோன்றியபடிதான் தன்னால் செயல்பட முடியும் என்று ஒவ்வொருவரும் தங்கள் செய்கைகளால் காட்டிய பிறகும் எஸ்.கே.விற்கு ஒரு சொட்டு பித்தம் இருக்கவே செய்கிறது. அவன் வார்த்தைகளால் ஒரு முட்டாளைப் போல அறிவுரைகளை வாரி வீசிக் கொண்டு இருக்கிறான்.
            அவனது கோபம் அப்படி அவனை அறிவுரையை நோக்கி உந்தித் தள்ளுகிறது. அறிவுரையின் பின்விளைவு அவனை கோபத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. இதுவே அவனது கோபத்திற்கும், அறிவுரைக்கும் உள்ள தொடர்பு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...