டார்கெட் ராக்கெட்டுகள்
அன்றைய டார்கெட்டில் எஸ்.கே. மிகவும் பின்தங்கியிருந்தான்.
பல அடிப்படையான சங்கதிகளில் கூட பற்பல தவறுகளைச் செய்திருந்தான். அவனுடைய கோபம் அதிகரித்து
ஜிவ்வென்று எகிறியது.
இவைகளை அவன் யாரிடம் பகிர்ந்து கொண்டு
ஆறுதல் பெறுவான்? சொன்னால் வெட்கக்கேடு என்பது அவனது எண்ணம். இப்படியே வீட்டிற்கு
வந்து மதிய உணவைச் சாப்பிடும் போது, அவனது தர்மபத்தினி கண்களைக் கசக்கிக் கொண்டே
தன் மனக்குமுறல்களை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
அதன் பின் எஸ்.கே.வின் வீடு எப்படி இருந்திருக்கும்
என்பதை சொல்வதை விட சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது.
உண்மையில், எஸ்.கே.வின் கோபத்திற்கு எஸ்.கே.தான்
பொறுப்பேற்க வேண்டும். அவன் விசயங்களைத் தூக்கிச் சுமக்கிறான். அதற்கு அவன் பொறுப்பேற்றுக்
கொள்ள வேண்டும் என்ற ஆணவம் கலந்த குற்ற உணர்வோடு பயிற்றுவிக்கப்படுகிறான்.
டார்கெட்டில் பின்தங்கினால் அதற்கு அவன்தான்
முழுமுதற் காரணம் என்பது போல கற்பிக்கப்பட்டு இருக்கிறான்.
இந்தச் சமுதாயம் இப்படித்தான் விதிகளைத்
திணிக்கிறது.
இப்படி வெளி டார்கெட்டுகளில் சிக்கி, சுயமதிப்பீட்டை
இழக்கும் எஸ்.கே. தன் தனிப்பட்ட வாழ்வில் எந்த வித டார்கெட்டும் இல்லாமல் அலைகிறான்.
அவனைப் பொருத்த வரையில் வெளி டார்கெட்டுகள் நிறைவு பெற்றால் தன் தனிப்பட்ட வாழ்வின்
டார்கெட்டுகள் அனைத்து நிறைவு பெற்று விடும் என்று நினைக்கிறான்.
அவனது வெளி டார்கெட்டுகளில் வெற்றி பெற்றாலும்
பி.பி., சுகர், இதயக் கேளாறு, மனஇறுக்கம், போன்றவைகள் உண்டாகி உறவுகளில் இணக்கமின்மை
என்பன போன்ற தனிப்பட்ட டார்கெட்டுகளில் இழப்புகளை மட்டுமே சந்தித்து நிற்கிறான்.
இன்றைய உலகின் டார்கெட்டுகள் தன்னம்பிக்கைகளைக்
கிள்ளி விடக் கூடியவைகளாக இருக்கின்றன. எரிச்சலையும், கோபத்தையும் மிகுதிபடுத்துகின்றன.
இவ்வளவு முயன்றும் சாதிக்க முடியவில்லையே என்று வாழ்வின் மீதே ஒருவித சலிப்பையும்,
வெறுப்பையும் ஏற்படுத்தக் கூடியன.
எந்த டார்கெட்டாக இருந்தாலும் அது தனக்கான
டார்கெட்டா என்பதைத் தனக்குத் தானே பகுத்தறியும் பக்குவம் வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட டார்கெட்டை எதிர்நோக்கி
அடைய இயலாமல் போகும் போதுதான் கோபம் ஏற்படுகிறது. அடைகிற இலக்கு எதுவானாலும் அதை
ஏற்றுக் கொள்ளும் தன்மை இருந்தால் கோபம் வரப் போவதில்லை. அதைத்தான் பக்குவம் என்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment