4 Sept 2017

மாற்றுச் சிந்தனையின் கதவுகள் திறக்கப்படும் நேரம்

மாற்றுச் சிந்தனையின் கதவுகள் திறக்கப்படும் நேரம்
            ஒரு வங்கியில் தனிநபர்க் கடன் கேட்டுக் கிடைக்காமல் போக, எஸ்.கே. இப்படி நினைத்துக் கொண்டான், "கடன் வாங்காமல் இருப்பது நல்லது. கடன் சுமை கழுத்தை அழுத்த வழியில்லாமல் போகிறது. அநாவசிய வட்டி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை." உண்மையில் அவனுக்குக் கடன் கொடுக்க வங்கிக்கு விருப்பம் இல்லை. அவன் அதை மேற்படி கருதிக் கொண்டு ஆத்ம திருப்தி அடைந்து கொண்டான். இதன் மூலம் உலகிற்குச் சொல்ல சில கருத்துகள் இருப்பதாக அவன் கருதுகிறான், அவைகள் என்னவெனில்...
            சில சூழல்களை அப்படியே விட்டு விடுவது நல்லது என்பது எஸ்.கே.வின் எண்ணம். அதுவாக நகர்ந்து ஒரு முடிவுக்கு வந்து விடும். அது குறித்துப் பெரிதாக ஆராய வேண்டியதில்லை. தாமதம் ஏதோ ஒரு நன்மைக்குதான். பொறுமையாக இருப்பது மேன்மையாது.
            எதிர்பார்த்து அது நடக்காமல் போகும் போது மனம் மிகவும் பாதிக்கப்படுகிறது. தாறுமாறாக மனம் யோசிக்கத் தொடங்குகிறது. மிகவும் எதிர்மறையாகச் சிந்திப்பது அப்போது அதற்குப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
            அப்படியெல்லாம் சிந்தித்து உடல்நலத்தையும், மனநலத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டியதில்லைதான். ஆனால் மனம் கேட்க வேண்டுமே!
            நல்ல ஒன்றிற்காக முயன்று இருக்கிறோம் என்ற எண்ணமும், அதில் பெற்ற அனுபவங்களும், நிறைய விசயங்களைத் தெரிந்து கொண்ட திருப்தியும், மனிதர்கள் பற்றி அறிந்து கொண்ட உண்மையும் சேர்ந்து நம் மனதை நம்மையும் அறியாமல் ஆற்றுப்படுத்த வேண்டும். சரியான மனிதராக நாம் இருப்பதற்கான அடையாளம் அதுதான்.
            காத்திருந்தால் எல்லாவற்றிற்கும் காலம் வருகிறது.
            காலம் வரும் வரைக் காத்திருக்க வேண்டும்.
            ஆக, முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். அதை கைவிட வேண்டியதில்லை. நடப்பதும் நடக்காததும் வேறு விசயம். அதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.
            எந்தக் கல்லில் எந்த மாங்காய் வேண்டுமானாலும் விழலாம். குறிகள் தொடர்ந்து தவறிக் கொண்டிருக்க முடியாது. ஏதாவது ஒரு குறி நிச்சயம் சரியாகச் சென்று தாக்கும்.           
            அந்த நம்பிக்கையில்தான் எஸ்.கே. ஏகப்பட்ட முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறான். ஒரு வங்கிக் கடன் மூடப்படும் போது, உங்களின் மாற்றுச் சிந்தனையின் கதவுகள் திறக்கப்படுகின்றன என்பதை மறவாதீர்கள் என்பதை அவன் இந்த உலகிற்கான தனது வேண்டுகோளாக வைக்கப் பிரியப்படுகிறான். மறுக்கப்படும் வங்கிக் கடனுக்கு மட்டுமல்லாது, நமக்கு மறுக்கப்படும் அனைத்து வாய்ப்புகளுக்கும் இது பொருந்தும் என்பதை உங்களுக்கு உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறான்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...