வருத்தப்படாத வாலிபர் சங்கம் - பார்ட்
2
எதிரிகளோடு போராடத் துவங்கி இறுதியில்
தங்களுக்குள் போராடுவதே போராட்டம் என்பதாகும்.
கட்டபொம்மன் - எட்டப்பன் தொடங்கி சமீபத்திய
பாகுபலி தொட்டு நிஜ வரலாற்றிலிருந்து பிம்ப வரலாறு வரை இதே கதையை எங்கும் படிக்கலாம்.
இராமாயணக் காலத்தில் இராமன் எதிரிகளோடு
போர் நிகழ்த்துகிறான்.
மகாபாரதக் காலத்தில் தருமன் தன் சகாக்களோடு
போராட்டம் நடத்துகிறான்.
மகாபாரதத் காலம் முடிந்து விட்டதா என்ன?
இப்போதும் அதுதான் தொடர்கிறது.
இந்திய வரலாறும் அப்படியன்றோ தொடர்கிறது.
இந்தியாவாகவும், பாகிஸ்தானாகாவும் நாம்
சண்டை போட முடியாது என்பதற்காகத்தான் அன்றோ நாம் வெள்ளைக்காரனை நாட்டை விட்டு வெளியேற்றினோம்!
தமிழகம் தன் பங்குக்கு மிச்சம் வைக்க முடியுமா
என்ன?
போராடும் ஒரு பிரிவும், போராடாத மறு
பிரிவும் தமக்குள் சமர் முறுக்கித் திரியும் போராட்டக்களம் மறுபடியும் தமிழகத்தின்
வரலாற்றில் வராமல் இருந்து விடுமா என்ன? வந்து விட்டது அன்றோ!
அப்போது வஞ்சனைக் களம் போர்க்களமாக மட்டும்
இருந்து, இப்போது இணைய களமாகவும் முன்னேறா விட்டால் போராட்ட வரலாறு கோபித்து கொள்ளும்
அல்லோ!
வருத்தப்படாத வாலிபர் சங்கங்களுக்கும்
சேர்த்து வருத்தப்படும் போராளிகள் சங்கம் போராடுவதால் அன்றோ இன்னும் கொஞ்சம் போராட்ட
எச்சில் சாமான்யனின் நாக்கில் சிறு சொட்டேனும் சுரக்கிறது.
எதற்கும் போராடாதவர்கள் போராளிகளோடு
போராடாமல் இருந்து விடுவார்களோ?
அப்படியாகினும் அவர்களுக்குப் போராட்டம்
என்பது மறந்து விடாமல் இருக்கட்டும் என்று போராளிகள் அதை அனுமதித்துதான் ஆக வேண்டும்
அன்றோ!
*****
No comments:
Post a Comment