கோபம் - கூடுதல் புரிதல்களுக்காக...
கோபத்தைப் பற்றி நிறைய எழுதச் சொல்லிக்
கேட்கிறார்கள். படிக்கின்ற நீங்கள் கோபம் அடைந்து விடக் கூடாதே என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
கோபம் பற்றி நிறைய தெரிந்தவர்கள் இதை
வாசிக்காமல் கடந்து விடுவது நல்லது. கோபத்தைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு
இதில் வாசிக்க நிறைய விசயங்கள் உள்ளது.
இனி அந்தக் கோபம் பற்றி...
டக் டக் என்று வரும் கோபத்தால் மனஇறுக்கம்
அதிகமாகும். மனதில் வேகம் உண்டாகும். எதையாவது
செய்து தொலைக்க வேண்டும் என்ற வெறியும் உண்டாகும்.
இவைகள் எல்லாம் கோபத்தின் வெளிப்பாடுகள்.
யோசித்துப் பார்த்தால் கோபத்தைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையைப் புரிந்து கொண்ட
மாதிரி. வாழ்க்கையில் எடுக்கப்பட்ட மோசமான முடிவுகள் கோபத்தின் போது எடுக்கப்பட்ட
முடிவுகளே. அதனால்தான் கோபத்தைக் கட்டுபடுத்தியவர்கள் அல்லது மடைமாற்றியவர்கள் உலகில்
உயர்ந்தவர்களாகி விடுகிறார்கள்.
இது இப்படித்தான் இருக்க வேண்டும், அது
அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சனாதன மனப்போக்கு கோபத்தை மிகுதியாக்கி விடும்.
அவைகளை அதன் போக்கில் விட்டு விடுங்கள். கோபம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
அவையவைகள் அதனதன் போக்கில் இருக்க உரிமை
உண்டு. அவைகளை மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அவைகள் தானாகவே மாறிக் கொள்ளும்.
அந்த மாற்றத்திற்கான ஏஜென்ட் நீங்கள்தான் என்பது போல கருதிக் கொண்டு, அவைகளை மாற்ற
முடியவில்லையே என்ற இயலாமையால் மனஇறுக்கம் கொண்டு கோபம் கொள்ள வேண்டியதில்லை.
கோபத்தை உண்டாக்குவதில் இயலாமையும், இல்லாமையும்
முக்கியப் பங்கு வகிக்கின்றன. எதையும் இயலாமையாக உணர வேண்டியதில்லை. இன்று இயலாமல்
போனது நாளை இயலக் கூடும். அந்த நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை இல்லையென்றால்
கோபம், விரக்தி, எரிச்சல் போன்ற உணர்வுகளுக்குத்தான் ஆளாக நேரிடும். வாழ்க்கையின்
அடிப்படையான உணர்வு நம்பிக்கைதான்.
ஒரு சிறு நம்பிக்கை இழப்புக் கூட கோபத்தில்
கொண்டு போய்தான் நிறுத்தும். நம்பிக்கையோடு இருப்பவர்கள் கோபப்பட மாட்டார்கள்.
அவர்கள் தாங்கள் நம்புவது நிச்சயம் நடக்கும் என்ற பொறுமையோடு காத்திருக்கும் மனவல்லமை
படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
சில பொழுதுகளில் நீங்கள் அப்படிக் கோபப்பட்டிருக்க
வேண்டியதில்லை. தினம் தினம் முயன்று எளிமையாகக் கிடைக்கக் கூடியது கூட கிடைக்கவில்லையே
என்று மனம் வெறுத்துப் போக வேண்டாம். அதற்கு பல காரணங்கள் இருக்கக் கூடும். நீங்கள்
ஒரு ஆள் மட்டும் என்ன செய்து முடியும் உடனடி மாற்றத்தை உருவாக்க?
நினைப்பது உடனடியாக நடக்க வேண்டும் என்ற
உணர்வும் கோபத்தைத்தான் உருவாக்கும். உடனடியாக நடக்கா விட்டால் அந்த ஏமாற்றம் கோபமாகத்தான்
வெளிப்படும். சில நேரங்களில் இது அதீதமாக வெளிப்பட்டு தவறான முடிவுகள் எடுக்கவும் காரணமாகி
விடும். ஆகவேதான் வாழ்க்கையையே தடம் புரட்டிப் போட்டு விடும் கோத்திடம் நாம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.
கோபத்தைத் தணிக்க எதையாவது செய்தால்தான்
தேவலாம் என்பது போல இருக்கும். அந்த எதையாவது செய்தல்தான் ஆராய்ந்து பார்க்காமல் செய்யும்
முட்டாள்தனமான காரியமாக அமைந்து பிற்பாடு அந்தக் கோபப்பட்டதற்கான தண்டனையை ஏற்படுத்தி
விடும்.
கோபத்திடம் ஒரு நல்ல விசயம் என்னவென்றால்,
நீங்கள் எதற்காகக் கோப்பட்டீர்களோ அதற்கான தண்டனைக்கான சூழலையும் அந்தக் கோபமே ஏற்படுத்தி
விடும் என்பதுதான்.
ஆகவே, கோபப்படும் தன்மையில் மட்டும் உலோபியாக
இருப்பது நல்லது. கோபப்படாமலே இருப்பது இன்னும் நல்லது. உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு
மட்டும் நன்மையானது என்பதோடு அல்லாமல் வருங்கால வாழ்க்கைக்கும் அதுவே நல்லது.
*****
No comments:
Post a Comment