9 Aug 2017

மெளனம் வெற்றியை எளிதாக்கும்!

மெளனம் வெற்றியை எளிதாக்கும்!
            "அதெல்லாம் ஒன்றும் கிடைக்காது போ!" என்ற ஒற்றை வாசகத்தில்தான் எத்தனை கோடி இன்பம். மனதின் இறுக்கப் பிடியை உடைத்துப் போடும் மந்திரம் இது. எதிர்மறை போல்‍ தோற்றமளிக்கும் மருந்து இது, பாம்பின் விஷம் மருந்தாவது போல. ஒவ்வொரு பிரச்சனையின் தீர்வும் அதுதான்.
            முயற்சி செய்வதால் மட்டும் எதுவும் கிடைத்து விடுவதில்லை. பின்கதவு, முன்கதவு என்று அதற்காக தட்ட வேண்டிய கதவுகள் நிறைய இருக்கின்றன. கதவு என்று தெரியாமல் சுவரைத் தட்டிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்கள் நிறைய.
            சூழல்கள் சரியில்லை. மனநிலை சொல்லவே வேண்டாம். முடிவு தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள். தொடர்ந்து சென்று கொண்டிருங்கள்.
            முயற்சியால் சாதிக்க முடியாதவைகள் கூட தொடர்ச்சியால் சாதிக்கப்படுகின்றன. எதுவும் கிடைக்கிறது என்பதற்காக வேண்டாம். எதாவது கிடைக்கும் என்பது நிச்சயம். இதுதான் கிடைக்க வேண்டும் என்ற பிடிவாதம் வேண்டாம்.
            'முயன்றால் முடியும்' என்ற நம்பிக்கைக்கு எதிராக நினைத்துக் கொண்டும், பேசிக் கொண்டும் போவது ஆச்சர்யமாக இருக்கும். நமது வாழ்க்கையே ஆச்சர்யம்தான். எது நடக்கும் என்று பேசுகிறோமோ, அதுவே நடக்காது என்று பேசும் துர்பாக்கிய நிலைக்கு ஒரு காலத்தில் தள்ளப்படுவோம். அதனால் வார்த்தைகள் வேண்டாம். ஏதோ ஒன்றுதான் நடக்கப் போகிறது. கீழ்மைகளோடு பேசிக் கொண்டு இருப்பானேன்?
   மெளனமாக இருங்கள். உங்களுக்கு நடக்க வேண்டியது நடக்கும். பேச்சு நடக்க வேண்டியதையையும் நடக்க விடாமல் செய்து விடும்.

*****

No comments:

Post a Comment