தூக்க மாத்திரைப் போடுவதற்கு முன்...
'செய்ய வேண்டும் என்று நினைக்கும் எண்ணம்தான்
எனக்கு முதல் எதிரி' - ரகசியக் குறிப்பில் எழுதி விட்டு கண்களை மூடினான் எஸ்.கே.
"செய்யப்பட வேண்டும் என்றால் அதை
செய்வதற்கான அனைத்தையும் தன்னை அறியாமல் செய்வதற்கான ஆர்வம் பிறந்து விடும். அது செய்யப்படாமல்
போனால் அதைச் செய்வதற்கான தடைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்.
எப்படிப் பார்த்தாலும் வழக்குகளும், விவாதங்களும்
மனதளவில் விடுபட வேண்டிய விசயங்கள். அதை மனதில் வைத்துக் கொள்வது வெடிகுண்டை மண்டையில்
கட்டிக் கொள்வதற்குச் சமானம்.
என் கேள்விகள் சரியாக இருக்கலாம். கோபங்கள்
நியாயமாக இருக்கலாம். அதை வெளிப்படுத்துவதற்கு உரியவர்கள் இவர்கள் அல்ல. தங்களை மட்டும்
சிந்திக்கும் மட்டமானவர்கள், கீழ்த்தரத்தை உயர்தரமாகப் பிதற்றுபவர்கள் அதைப் புரிந்து
கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களோ
என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அவர்கள்தான் புரிந்து கொள்ள மாட்டார்களே!
அப்புறம் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்?
அவர்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்
என்று தீவிரமாக எதிர்பார்க்கிறேன். அவர்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்ன
அவசியம் வந்து கிடக்கிறது? அவர்களுக்கு எந்த அவசியமும் வந்து கிடக்கவில்லை. அதைப் புரிய
வைத்தவன் என்ற பெயர் மீதான ஆசைதான் எனக்கு வந்து கிடக்கிறது.
நிச்சயமாக அப்படியா? அப்படித்தான். இந்த
உலகில் அவரவர்களும் அவரவர் விருப்பப்படி வாழ உரிமை இருக்கிறது. அவர்கள் அப்படியே வாழ்ந்து
விட்டுப் போகட்டும். பிழையில்லை. உன் சிந்தனைகளால் அடுத்தவர் வாழ்க்கையில் குறுக்கிடாதே."
சிந்தனைகள் ஓய்ந்த மாதிரி இருந்தது எஸ்.கே.விற்கு.
தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்டு உறங்குவது மேலானது என முடிவெடுத்தான் எஸ்.கே.
*****
No comments:
Post a Comment