திறக்காதப் பூட்டுகளின் சாவிகள்
ஒவ்வொருவரும் தங்கள் மனநிலைக்கு ஏற்ப
நடந்து கொள்கிறார்கள். தங்கள் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும், அதை சமன்படுத்திக்
கொள்ள வேண்டும், அந்த மனநிலை சரியா, தவறா என்பதை ஆராய வேண்டும் என்பன போன்ற எந்த
வித தர்ம நியாயங்களுக்கும் கட்டுபடாமல் எந்த வித நோக்கின்றிச் செயல்படுகின்றனர்.
அதே நேரத்தில் தாங்களே புரிந்து கொள்ளாத
தங்கள் மனநிலையை அடுத்தவர்கள் மட்டும் சரியாகப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ப
நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இப்படிப்பட்ட வறட்டுப் பிடிவாதம் பிடித்தவர்களை
என்ன செய்வது? சாதாரணமாக நினைத்து விட்டு விடுவதா? அவர்கள் போக்கில் போகட்டும் என்று
ஒதுங்கிக் கொள்வதா? எங்காவது போய் முட்டிக் கொள்ளட்டும் என்று கழன்று கொள்வதா?
இந்த வகையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழந்தைக்குச்
சமானம். அவனை ஒரு சாதாரண ஒரு விசயம் திருப்திபடுத்தும். அது எது என்பது அவனுக்கும்
தெரியாது. எதிரில் இருக்கும் நமக்கும் தெரியாது. கொஞ்சம் பழகிப் பேசித்தான் கண்டுபிடிக்க
வேண்டும். திறக்காத அந்த மனிதனின் மனப்பூட்டை அந்த எளிய விசயம் ஒரு சிறிய சாவியாக இருந்து
திறந்து விடும்.
அதற்கு அவர்களும் அனுமதிக்க வேண்டும்.
நாமும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டுக்கும் இடம் இருக்க வேண்டும்.
திறக்காதப் பூட்டுகளோடு நிறைய மனிதர்கள்
அலைவதைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. சாவிகள் சின்னது. பூட்டுகள் பெரியது.
சாவிகள் சிறியதாக இருப்பதாலே அவைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதும் கய்ட்டமாக (கஷ்டமாக)
இருக்கிறது.
பொதுவான ஒரு சாவி இருக்கிறது. எல்லா பூட்டிற்கும்
பொருந்தும். ரகசிய வரைபடம் தந்தால் கண்டுபிடித்து விடுவீர்கள் என்பது தெரியும். அதனால்
ரகசியமாகச் சொல்கிறேன். கொஞ்சம் காது கொடுங்கள், "அன்பு" - அதுதான் அந்த
எளிய சாவியை ஏழு கடல், ஏழு மலை தாண்டிக் கண்டுபிடிப்பதற்கான வரைபடம்.
*****
No comments:
Post a Comment