1 Aug 2017

அல்பத்தனம் - ஓர் ஆய்வியல் பார்வை

அல்பத்தனம் - ஓர் ஆய்வியல் பார்வை
            சிலர் அல்பத்தனங்களோடேயே வாழ்கிறார்கள். அதைத் திருத்துவதை அவர்களுக்கு எதிரான போராகக் கருதுகிறார்கள். என்னத்தைச் சொல்ல! அவர்களை அப்படியே விட்டு விடுவதா? சாக்கடையில் நெளியும் புழுக்களை எடுத்து நல்ல தண்ணியில் போட்டால் செத்து விடும் என்பார்களே!
            பணம் இந்த அல்பத்தனத்தில் மையப்புள்ளி. அப்பாவி போல இருக்கும் அல்பதனக்காரன் படுபாவியாகக் கூட மாறுவான் இந்தப் புள்ளியில். ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும் எதிர்காலம் கண் முன் நடமாடும்.
            அல்பத்தனம் குறித்து நிறைய மேற்கோள்களைக் காட்டி கட்டுரை எழுத வேண்டும் என்று எஸ்.கே.விடம் ஒரு திட்டம் இருந்தது. அப்போதெல்லாம் ஒரு சில வரிகள் எழுதினாலே எஸ்.கே.விற்கு மனச்சோர்வு ஏற்பட்டது. அந்த மனச்சோர்வே கோபமாகவும் வெளிப்பட்டது.
            ஒரு வரியில் ஒரு வார்த்தை எழுத அவன் அரை மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டான். தேவையில்லாத கால விரயம். அல்பதனமாக ஆசை கொண்ட மனதினால் ஆகிய எஸ்.கே.வால் அதை விலக்க முடியவில்லை. அதில் சிக்கிக் கொண்டு சின்னபின்னமானான்.
            சென்ற வருடமும் இதோ போல் ஒரு கட்டுரை எழுதும் முயற்சியில் படாத பாடு பட்டான் எஸ்.கே. அது ஒரு சுமையாக மாறி மனதை வருத்த ஆரம்பித்தது. அது தரும் மனஅழுத்தம் அவன் மனதில் மாயக் காட்சிகளைச் சுழல விட்டது. மனப்பிறழ்வில் அவனை அடித்துக் கொண்டு போய் தள்ளியது. அந்த நாட்களில் மிக அதிகமாக எஸ்.கே. தூங்கினான். தூக்க மாத்திரைச் செலவு மிச்சமானது. தலைவலி அதிகமானதால் மிச்சமான தூக்க மாத்திரைச் செலவைத் தலைவலி மாத்திரைச் செலவு காவு வாங்கியது.
            இனி அல்பத்தனமாக அல்பத்தனம் குறித்து எழுதக் கூடாது என்று அல்பத்தனமான ஒரு முடிவைக் கடைசியாக வந்தடைந்தான் எஸ்.கே.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...