2 Aug 2017

நிர்வாணமாக வேண்டிய மனங்கள்!

நிர்வாணமாக வேண்டிய மனங்கள்!
            நமது பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் அழிக்க வேண்டிய ஐந்து விடயங்களில் ஜாதியவாதமும் ஒன்று என்கிறார்.
            உத்திரப் பிரதேச முதல்வர் யோகிஜி தலித்துகளின் இல்லங்களில் சென்று சாப்பிடுகிறார்.
            அமித்ஷாஜியும் தலித்துகளின் இல்லத்தில் உணவருந்துவதைப் பெருமையாகக் கருதுகிறார்.
            இவர்களைப் பின்பற்றும் தொண்டர்கள்ஜிக்கள் ஏன் தலித்துகள் காதலிக்கக் கூடாது என்று எதிர்க்கிறார்கள்? அண்மையில் முகநூலில் வந்த புகைப்படச் செய்தி மிகுந்த துக்ககரமானது. உத்தர பிரதேசத்தில் தலித்துகள் காதலித்தார்கள் என்பதற்காக காதலன், காதலி இருவரையும் நிர்வாணமாக்கி, காதலன் தோள் மீது காதலியைத் தூக்கி வரச் செய்து ஊர்வலம் நடத்தியுள்ளார்கள். காதலிப்பவர்களுக்கு அதுவும் குறிப்பாக காதலிக்கும் தலித்துகளுக்கு இதன் மூலம் ஓர் எச்சரிக்கைச் செய்தியைக் கூறுவதாக கூறுகிறார்கள்.
            மேல் மட்டத்தில் தலைவர்கள் தலித்துகளின் முன்னேற்றத்திற்காக உழைப்பதாகச் சொல்கிறார்கள். கீழ்மட்டத்தில் தொண்டர்கள் தலித்துகளை முன்னேற விடாமல், அவர்களைக் காதலிக்கக் கூட அனுமதிக்காமல் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தி மகிழ்கிறார்கள். நிர்வாணப்படுத்த வேண்டியது எளிய சமூகம் சார்ந்த மனிதர்களல்ல. அவர்களை வன்கொடுமைக்கு ஆளாக்கும் ஆதிக்க வர்க்கத்தின் மனங்கள்தான். பல அசிங்கமான சிந்தனைகளையும், அபத்தமான வாதங்களையும் கொண்டுள்ள அந்த மனம்தான் நிர்வாணமாக்கப்பட்டு தூய்மைபடுத்த வேண்டும்.
             இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் சமயவாதம் சார்ந்த இயக்கங்களின் இரட்டை நிலை அம்பலமாவது வரலாற்றில் இது முதல் முறையல்ல. தலித்துகள் முன்னேற விரும்பினால் அடிமைகளாய் இருந்துதான் முன்னேற வேண்டும் என்ற செய்தியை இதன் மூலம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
            மனித நாகரிகத்தின் உயர்ந்த நிலை ஆடை. ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்துவதன் மூலம் காட்டுமிராண்டித்தனமான அணுகுமுறைக்கு எப்படி மனிதர்கள் தயாராகிறார்கள்? சாதீயம்தான் அதற்கான பலம் தருகிறது. மேல்மட்டம் சாதியவாதம் கூடாது என்று சத்தியப்பிரமாணம் எடுக்கிறது. கீழ்மட்டம் அதையே தன் ஆயுதமாக ஏந்துகிறது. இந்த முரண்பட்ட நிலையும், அது சார்ந்த வாதங்களும்தான் சாதியவாதத்தின் இனிப்பும், நஞ்சும் கலந்த இரண்டு பக்கங்கள்.
            ஒரு பெரியார் இருந்தார். தமிழ்நாடு இத்தகைய அசிங்கங்களுக்கு ஆளாகாமல் தப்பித்தது. ஒரு பெரியார் அங்கில்லை. உத்தரபிரதேசம் இப்படிப்பட்ட அசிங்கங்களைச் சந்திக்க நேரிடுகிறது. தேசிய அளவில் அம்பேத்காரின் தேவையை உணரும் அதே சமயத்தில் மாநிலத்திற்கு மாநிலம் பெரியார்களின் தேவை உணரப்படுவது காலத்தின் கட்டாயம்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...