24 Aug 2017

புதிய உலகுக்கு ஏற்ற புதிய விளக்கங்கள்

புதிய உலகுக்கு ஏற்ற புதிய விளக்கங்கள்
            ஒரு முடிவு எட்டப்படாத நிலை செயலின்மைக்கு ஒரு முக்கியக் காரணம். எஸ்.கே. இரண்டு விசயங்களில் முறித்தெடுக்கப்பட்டான்.
            ஒன்று, அவன் தோழியின் மணமுறிவு தொடர்பானது.
            இரண்டு, ஒரு ப்ளாட் வாங்குவது தொடர்பாக கொடுக்கப்பட்ட சில லட்ச ரூபாய்க்கான நிலை என்னவென்று தெரியாத நிலை தொடர்பானது.
            இந்த‍ வேலைகளில் அவன் சிலரை நம்பி சில பொறுப்புகளை அளித்திருந்தான். இந்த இரண்டிலும் வாங்கிய மரண அடிகள் மூலம் இனி எந்த வேலையையும் யாரிடமும் கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.
            அவன் யாரையெல்லாம் நம்பி இருந்தானோ, அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியாமல் தொடர்ந்து எஸ்.கே.வைக் குழப்பி விட்டுக் கொண்டு இருந்தார்கள்.
            பெரும்பாலும் எந்த முடிவுகளிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பவன் எஸ்.கே. ப்ளாட் வாங்கும் முயற்சியில் இறங்கி பெரும் பின்னடைவைச் சந்தித்து விட்டான்.
            அவனைத் தேவையற்ற குழப்பங்களிலும், மனஉளைச்சலிலும் ஆழ்த்தி கட்டம் கட்டி அடித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள நீண்ட நாள்கள் தேவைப்பட்டது.
            இப்போதுதான் அவன் உணர்கிறான், பல விசயங்கள் அவனுக்குத் தேவையில்லை என்பதை. அதில் ஒன்று சொந்த இடம். இப்படிப்பட்ட மனஉளைச்சலுக்கு ஆளானதால்தான் கணியன் பூங்குன்றன் என்பவர் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனப் பாடித் திரிந்தார் என்று எழுதி தன் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டான்.
            கூடுதலாக மேலும் இதற்கு அவன் சொன்ன விளக்கம் வித்தியாசமானது. அது இது, "சரியோ தப்போ ஒரு முடிவில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறேன். சரியாக இருந்தாலும் சரி, தவறாக இருந்தாலும் சரி அதை நான்தான் கடைசியில் எதிர்கொள்ள வேண்டும். அதற்கான கஷ்ட நஷ்டங்களையும் நான்தான் எதிர்கொள்ள வேண்டும். கடைசியில் எல்லாமும் என் தலையில்தான் விழப் போகின்றன என்பதால் முடிவு என்னுடையதாக இருப்பது நல்லது."

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...