மற்றவர்களின் வேலை இயந்திரமா நீங்கள்?!
எஸ்.கே.யும் மனிதன்தானே. எவ்வளவு வேலைகளைப்
பார்ப்பான்? எரிச்சலாக இருக்கிறது அவனுக்கு.
சரியான விசயங்கள் சொல்லப்படும் போது
அதைக் கேட்டு அதன்படி நடந்து விட்டு இருந்தால் நாட்கள் தண்டமாக கழிந்திருக்காது. அது
மட்டுமல்லாது தொடர்ந்து வரும் நாட்களும் தேவையற்ற அலைச்சல்களுக்கு ஆளாகும் நிலைக்கு
தள்ளப்பட்டிருக்காது.
அவரவர்களும் அவரவர் மனநிலையில் இருக்கிறார்கள்.
அதுவே சரியெனவும் நினைக்கிறார்கள். அவர்களின் மனநிலைக்கு மாறாக எதுவும் செய்ய முடியாத
ஒரு அடிமையைப் போல எஸ்.கே. இருக்கிறான்.
தவறுகளைக் காணும் போது அவனுக்குக் கண்டிக்க
வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் கண்டிக்க முடிவதில்லை. இது அவன் டென்சனை எகிற அடித்து
விடுகிறது.
அவர்களின் சோம்பேறித்தனத்திற்கும், அலுப்பிற்கும்
எஸ்.கே. பலியாக வேண்டியதாகி விடுகிறது. அவர்களிடம் எஸ்.கே.வால் அதைச் சொல்ல முடியாது.
அதே நேரத்தில் எதையும் வெளியே சொல்லாமல்
எஸ்.கே.வின் டென்ஷனையும் எவ்வளவு நாள்தான் அதிகரித்துக் கொண்டே போவது? எப்படியாவது
இந்த டென்ஷனிலிருந்து வெளியேற வேண்டும் என்பதால் வேறு வழியில்லை, அவன் எழுதித் தீர்த்துதான்
ஆக வேண்டும். இப்படித்தான் அவன் எழுதி ஆக வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகி விடுகிறான்.
எஸ்.கே. எல்லாவற்றிலும் ஒரு விட்டேந்தி
தனமான மனநிலையோடு இருந்து வருகிறான். இல்லாவிட்டால் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்
கொண்டு, பைத்தியம் பிடித்தது போல அவன் அலைய வேண்டியதுதான்.
எல்லாவற்றிலும் ஒரு லட்சியம் இருப்பது
போல, ஒரு அலட்சியமும் இருக்க வேண்டும் என்ற எஸ்.கே. நினைக்கிறான். இல்லையென்றால் மனிதன்
டென்ஷன் ஆகி டெஸ்ட்ரக்சன் ஆக வேண்டும் என்று அவன் குமுறுகிறான்.
ஆக, அவர்களையெல்லாம் நம்பி ஒரு காரியத்தில்
இறங்கும் போது எவ்வளவு கவனமாக இறங்க வேண்டும் என்பதை இந்த அனுபவத்தின் மூலம் எஸ்.கே.
உங்களுக்கு விளக்க விரும்புகிறான்.
புரிந்து கொள்ளுங்கள் மக்களே! அவர்கள்
எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் உங்கள் தலையில் கட்டி விடும் சாமர்த்தியசாலிகள்.
எஸ்.கே. அடிக்கடி எல்லாரிடமும் கேட்பான்,
"ஏன் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாய்?" என்று. அந்த அளவுக்கு அவன்
அடிபட்டு அனுபவப்பட்டு, அடிபட்டு விட்டான். ஆம், நீங்கள் ஏன் தேவையில்லாமல் எதையாவது
செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
*****
No comments:
Post a Comment