7 Aug 2017

ராசி பலன்கள் எழுதுவது எப்படி?

ராசி பலன்கள் எழுதுவது எப்படி?
            கோபம் என்பது அவருடைய அழிவை அவரே செய்து கொள்வது போன்றது. கோபப்பட்டு என்னவாகப் போகிறது? எந்தப் பயனும் நேரப் போவதில்லை. எஸ்.கே. மேல் கோபம். நேரத்திற்கு கிளம்ப மாட்டான். காலந்தவறாமை குறித்து கனத்தப் புத்தகம் ஒன்று எழுதியிருக்கிறான்.
            நேற்று அதிலிருந்து கிளம்பிய கோபம் இன்று வரை தொடர்கிறது. எம்.கே.விற்கு கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு முன் எஸ்.கே. தொடர்புடைய நிகழ்வுகளும் மன இறுக்கத்தை அதிகரிக்கும் வகையில் நிகழ்ந்துள்ளன.
            அந்த ஞாயிற்றின் இரவில் எஸ்.கே.யிடமிருந்து வந்த செல்பேசி அழைப்பு எம்.கே.வைக் குழைத்துப் போட்டு விட்டது. நல்லது சொல்லும் சொற்கள் எஸ்.கே.யின் மனதில் ஏற மாட்டாது, அல்லது அவனின் தோழன்மார்கள் சொற்களால் விஷமேறி நின்றான். எம்.கே. சொல்ல சொல்ல மறுத்து மறுத்துப் பேசினான்.
            எஸ்.கே.வை மறுநாள் வரை செல்பேசியில் பேசிப் பேசியே சமாதானம் செய்து இப்போது எம்.கே. எதிர்மறை எண்ணங்கள் மிகுந்து நிற்கிறான். இவன் சமாதானம் அவனிடம். அவன் எதிர்மறை விளைவுகள் இவனிடம்.
            ஒப்பந்தம் ஒன்றுக்காகக் கொடுக்கப்பட்ட பணமும், அதில் தொடரும் மந்த கதியும், மனை ஒன்று வாங்குவதில் நீடிக்கும் மனக்குழப்பமும் எம்.கே.வை இன்னும் கோபப்படுத்துகின்றன. வாங்க முடிந்த மனையை மனக்குழப்பத்தால் தள்ளிப் போட்டுக் கொண்டும், முடிக்க முடியாத ஒப்பந்தத்தை முடிக்க முயற்சித்துக் கொண்டும் எஸ்.கே.வின் அணுகுமுறைகள் எம்.கே.விற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எஸ்.கே.யிடம் கடுமையாகப் பேச வேண்டும். பேசினால் நிலைமை விபரீதம் ஆகும். அதற்கு இப்போது இருக்கும் குழப்ப நிலையை பரவாயில்லை என்று முடிவெடுத்து விட்டான் எம்.கே.
            சிலதுகள் அப்படித்தான். எந்த விதத்திலும் சாதகமாக அமையாது. பண விரயமும் ஏற்படும். சொல்லும் எடுபடாது. சூழலும் மோசமாக அமையும். வேறு வழியில்லை அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர. ராசி பலன்கள் சொல்வது போல இருக்கிறதா? இதைக் கொண்டு ராசி பலன்கள் எப்படி எழுதப்படுகிறது என்பது இந்நேரம் எஸ்.கே.விற்குப் புரிந்திருக்கும். அவனுடைய ராசி பலனை எதிர்பாருங்கள்.

*****

No comments:

Post a Comment