6 Aug 2017

பேச்சுக் கலையில் ஜஸ்ட் பாஸ் பெறுவதற்கான பரீட்சார்த்தங்கள்

பேச்சுக் கலையில் ஜஸ்ட் பாஸ் பெறுவதற்கான பரீட்சார்த்தங்கள்
            மனிதர்களிடம் பேசுவது பிடிக்கவில்லை. எருமை மாடுகளிடம், சமயங்களில் பன்றிகளிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன். காது கொடுத்து கேட்கின்றன. மனிதர்களிடம் பேசுவது பயனற்ற முறையில் முடிகிறது. மனிதர்களிடம் பேசுவதை முற்றாக விட்டு விடவில்லை. விட்டு விடவும் முடியாது. மாற்றுக் கருத்துகள் எனும் மடத்தனங்களை எருமைகளோ, பன்றிகளோ சொல்லாததால் அது சாத்தியப்படவில்லை.
            மனிதப் பிறவிகள் தங்கள் மனதில் உள்ளதைத்தான் வற்புறுத்துகின்றனவே தவிர, எஸ்.கே.ஆகிய நான் சொல்வதை கேட்க மறுக்கிறார்கள். அவர்களின் மனதில் உள்ள குரல்களே அவர்களுக்கு எதிரொலிக்கின்றன. அவைகளைப் பேசவே எஸ்.கே.வாகிய என்னைத் தேடி வருகிறார்கள். தவிர, நான் பேசுவதைக் கேட்க வரவில்லை. ஊரில் இருக்கும் கூட்டம் நான் பேசுவதைக் கேட்க ஒரு கூட்டமே வருவதாகப் பேசிக் கொண்டிருக்கிறது. கேட்க கேட்க சிரிப்பாக இருக்கிறது. சிரிக்காமல் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். சிரித்து விட்டால் அது அவர்களை அலட்சியப்படுத்தியது போலாகி விடும்.
            நான் சொல்வேன், எல்லாம் ஒரு முயற்சி. அவ்வளவே. அதில் பத்தாயிரம், இருபதாயிரம் பெற வேண்டும் என்றால்...? பெறாமல் போகும் வாய்ப்புகளும் உண்டு. ஒரு வழக்கு என்றால் இரண்டு பக்கமும் தீர்ப்பாகும் அபாயம் இருக்கிறது. இரண்டையும் ஏற்றுக் கொண்டுதான் வழக்கைத் துவங்க வேண்டும். உன் பிடிவாதத்தால் நடுநிலையை எதிர்க்காதே. உன் பிடிவாதத்திலிருந்து வெளியேற முடியாமல் அநாவசியமாக மற்றவர்களை அழிப்பதாக நினைத்துக் கொண்டு உன்னை அழித்துக் கொள்ளாதே.
            உன் கோபமும், பிடிவாதமும் என்னை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. அதற்கு ஏதேனும் வழி தேட என்னைத் தூண்டுகின்றன. ஒருவரது கோபத்திற்கும், உணர்ச்சிக்கும் வழி தேட நினைப்பது முட்டாள்தனம். இதனால்தான் எனக்கு மனிதர்களிடம் பேசுவது பிடிக்கவில்லை.
            கடைசியில் நான் சொன்ன கருத்தை விட்டு விட்டு, அவர்கள் சொல்லும் கருத்தை நான் கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இதற்கு ஏன் என்னைத் தேடி வருகிறார்கள் எதையாவது சொல்லுங்கள் என்று? என்னை ஏதாவது கடைபிடிக்க வைக்கத்தான் வருகிறார்கள். நான்தான் அவர்களுக்கு கடைபிடிக்க ஏதாவது சொல்வதாக நினைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டு இருக்கிறேன். ஆனாலும் பாருங்கள், இந்தக் கூத்துக்கே கூட்டம் குறைவேனா என்கிறது.

*****

No comments:

Post a Comment