மனம் ஒரு கருத்தாக்கம்!
மனம் என்பதே ஒரு கருத்தாக்கம்தான். ஒரு
கருத்தை விஞ்சும் இன்னொரு கருத்து உண்டு என்பதால் ஒரு மனத்தை இல்லாமல் செய்யும் இன்னொரு
மனத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இதில் அடிப்படையில் கவனிக்க வேண்டிய விசயம்
என்னவென்றால், மனம் உணர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது என்பதுதான். அதைச் சரியாகப் புரிந்து
கொண்டால் முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல உணர்ச்சியை தள்ளி வைத்து அறிவால்
மனதைப் புரிந்து கொள்ள மனமற்ற ஒரு நிலையை அடைந்து விடலாம்.
சலிப்பு என்பதை எதிர்மறையாகப் பார்க்க
வேண்டியதில்லை. மனமற்ற நிலைக்கு அடித்தளம் அதுதான். சலிப்புறாத மனதால் மனமற்ற நிலையை
நோக்க முடியாது.
சலிப்பு என்பது மனதிற்கான ஓய்வு. உடலுக்குக்
களைப்பு என்பது போல, மனதிற்கு சலிப்பு.
சலிப்புதான் அதுவரை ஆர்வம் கொண்டிருந்த,
பற்று வைத்திருந்த எல்லாவற்றையும் விலக்கிப் புதியதைப் பார்க்கும் தைரியத்தைத் தருகிறது.
சலிப்படையாது போனால் ஆர்வத்தால் இழுத்துக் கொண்டே போவதைத் தவிர மனதிற்கு வேறு வழியில்லை.
வெள்ளம் பாயும் நதியில் விழுந்து விடுவதைப் போல அது ஒரு நிலை. மனம் சலிக்காத வரை பற்றின்
மேல் பற்று அடுக்கடுக்காக விழுந்து கொண்டிருக்கும்.
சலிப்பு வராத வரை புதிய நகர்வு சாத்தியமில்லை.
சலிப்புக் கொண்டாடப்பட வேண்டியது. ஒரு புதிய உலகிற்கான புதிய பாஸ்போர்ட் சலிப்புதான்.
மனம் எனும் கருத்தாக்கத்தில் விழும் முதல் ஓட்டை அதுதான்.
ஓட்டை விழாத வரை கப்பல் மூழ்காது. கப்பல்
மூழ்கினால்தான் மீனாக நீந்த முடியும் சமுத்திரம் முழுவதையும் துலாவிக் கொண்டு. கப்பல்கள்தான்
கவனமாக இருக்க வேண்டும் சமுத்திரத்தில், மீன்கள் அல்ல என்ற உண்மை உங்களுக்குப் புரிந்திருக்கும்.
*****
No comments:
Post a Comment