'பணம் என்னடா பணம்?!' நாலடி தரும் சவுக்கடி
"ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே"
என்ற திரைப்பாடல்
ஆசை எனும் அலை மேல் மனம் சஞ்சலிப்பதைக் காட்டுகிறது. 'மனசஞ்சலம்' என்ன ஒரு வார்த்தை!
"அலைபாயுதே கண்ணா!" பாடல் மனதிற்குள்
ஒரு முறை இந்நேரம் உங்களுக்குள் வந்து போயிருக்கும்.
மணிரத்னத்தில் 'அலைபாயுதே' திரைப்படமும்
மனதிற்குள் வந்து போயிருக்கலாம். அந்தத் திரைப்படத்திலும் அப்பாடல் இடம் பெற்றிருக்கும்.
மனதிற்கு எல்லாவற்றின் மீதும் ஆசை. ஆசைப்பட்டதை
அடைந்த பின்னும் அதற்கு மேலும் அடைய வேண்டும் என்ற ஆசை. அதாவது பேராசை.
ஆசைப்பட்டதை அடைந்தால் மனம் நின்று விடும்
என்று நினைக்கிறோம். ஆனால் அங்கிருந்துதான் மனதின் பெரும்பாய்ச்சல் ஆரம்பிக்கிறது.
அது வரை ஆசைப்பட்டுக் கொண்டிந்த மனம் பேராசைப்பட ஆரம்பித்து விடுகிறது.
பணம் சேர்க்கும் ஆசை முதலில் ஆசையாக, பின்பு
பேராசையாக உருவெடுத்து இறுதியில் பணப்பிசாசாக மாறி விடுகிறது.
வாழ்க்கையில் செல்வம் எந்த அளவுக்கு முக்கியம்
என்று உணர்ந்து கொள்கிறோமோ, அதே அளவுக்கு அது நிலையில்லாதது என்பதையும் உணர்ந்து
கொள்ள வேண்டும்.
நாலடியாரில் 'செல்வம் நிலையாமை' எனும்
ஓர் அதிகாரத் தலைப்பு உண்டு. அறுசுவை உணவு கூட நிலையில்லாமல் போகும் ஒரு காலம் வரும்
என எச்சரிக்கிறது நாலடியார். அப்புறம் எதற்கு அடித்துப் பிடித்துக் கொண்டு 'லட்சம்
கோடிகளில்' பணம் சேர்க்க வேண்டும்?
வானத்தில் தோன்றும் மின்னல்! நொடி நேரம்
நிலைத்திருக்குமா? செல்வமும் அப்படித்தான். நிலையில்லாமல் போக அதற்கு நொடி நேரம்
போதும்.
வண்டிக்கால் சக்கரம் இருக்கிறதே - அது
சுழலச் சுழல கீழ்ப்பக்கம் மேலே போகும். மேல்ப் பக்கம் கீழே போகும். அதுபோல செல்வர்
வறியவறாகலாம். வறியவர் செல்வராகலாம். மாறி மாறி இருப்பதே செல்வத்தின் இயல்பு.
இப்படி அழகான உவமைகளால் செல்வம் நிலையில்லாதது
என எடுத்துச் சொல்கிறது நாலடியார்.
"பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின்"
என்று பெருஞ்செல்வம் வைத்திருப்போரை அறம் செய்யச் சொல்கிறது. பெரும்பொருள் என்ற
சொல் கவனிக்கத்தக்கது. மனிதன் பொருள் சேர்க்கலாம். பெரும்பொருள் சேர்க்கக் கூடாது.
அப்படிச் சேர்த்தால் அது உழைப்பையும், மனித மாண்பையும், பிறர்குரியதை உறிஞ்சி எடுத்ததாகத்தான் இருக்கும். அப்படிச் சேர்த்த
பெரும்பொருள் மீண்டும் எங்கிருந்த உறிஞ்சி எடுக்கப்பட்டதோ, உறிஞ்சி எடுக்கப்பட்ட
அந்த மனித குலத்திற்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நாலடியார் நாசுக்காக வலியுறுத்துகிறது.
இவ்வளவு சொல்லியும் செல்வத்தை வழங்கும்
மனமில்லாத பெருஞ்செல்வர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் எதைக் கண்டும் பயமில்லாத
மனசாட்சி அற்றவர்கள். சாவு ஒன்றுதான் அவர்களை பயப்படுத்தும். அவர்களை நல்வழிப்படுத்த
சாவையும் கையில் எடுக்கிறது நாலடியார். கூற்று எனும் எமன் வரும் முன் நல்லது செய்யுங்கள்
என்று பயம் காட்டுகிறது.
சேர்த்து வைத்த பெருஞ்செல்வம் போகும்
என்று சாவைக் காட்டி நாலடியார் சொல்வதைக் கண்டு பயப்படாதவர்கள் கூட, "மனையாளை
மாற்றார் கொள" சேர்த்து வைத்த செல்வம் போகும் என்று சொல்வதைக் கண்டு பயந்துதான்
ஆக வேண்டும். பெருஞ்செல்வக் குவிப்பைத் தமிழ் இலக்கியங்கள் எந்த இடத்திலும் ஆதரித்ததில்லை.
தமிழ்ப் புலவர்கள் வறுமையிலே வாழ்ந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவரின்
பெருஞ்செல்வக் குவிப்பு இன்னொருவரின் வறுமைக்குக் காரணமாகி விடக் கூடாது என்ற கவலை
எப்போதும் இலக்கியத்திற்கு இருந்து வருகிறது. ஒரு பிரச்சாரத் தொனியில் நீதி இலக்கியம்
படைக்கப்பட்டதற்கு அது ஒரு காரணம்.
உண்ணாமல், உடுத்தாமல் பணம் சேர்த்து, சேர்த்ததைத்
தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் அனுபவிக்கக் கொடுக்காமல்... ச்சீச்சீ என்ன வாழ்க்கை
என்று அருவருக்கும் நாலடியார் கடைசியாகச் சொல்கிறது, "தேனீக்கள் தேன்கூட்டில்
சேர்த்து வைத்த தேன் கடைசியில் தேனீக்களுக்குப் பயன்படாமல் போவதைப் போல்தான் நீ சேர்த்து
வைத்த செல்வமும் கடைசியில் உனக்குப் பயன்படாமல்
போகும்!" என்று. என்ன ஓர் அறச்சீற்றம் பாருங்கள்.
*****
No comments:
Post a Comment