11 Aug 2017

டென்ஷனை டெத் பாடியாக்க... சில யோசனைகள்

டென்ஷனை டெத் பாடியாக்க... சில யோசனைகள்
            இது ஒரு காலம். எதையும் சீரியஸ் என்றால் தாட்சண்யம் இல்லாமல் நோ சொல்லி விடுங்கள். எல்லாம் சிரிப்பும் விளையாட்டும்தான். அது முடியாது என்றால் மனஉளைச்சலிருந்து உங்களை யாரும் காப்பாற்ற முடியாது. தேவையில்லாமல்  நீங்கள் மற்றவர்களுக்கு எதிரியாவதிலிருந்தும் உங்களை யாரும் காப்பாற்ற முடியாது.
            எல்லாம் சிரிப்புதான். உங்களுக்குச் சிரிக்கத் தெரியாமல் இருக்கலாம். எல்லாம் வேடிக்கைதான். உங்களுக்கு அதன் வேடிக்கை புரியாமல் இருக்கலாம். வாழ்க்கை ஒரு விளையாட்டுதான்.
            எல்லாவற்றிலும் சரியாக நடக்க வேண்டும் என்ற உணர்வுதான் வாழ்க்கையைச் சீரியஸாக்குகிறது. ஏன் எல்லாவற்றிலும் சரியாக நடக்க வேண்டும்? கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால்தான் வாழ்க்கை. அதுதான் சுவாரசியம்.
            நீங்கள் எப்படி சீரியஸாகிறீர்கள்? உங்களால் உங்களுக்கு ஏற்படும் விபத்து அது. உங்கள் மனம் சொல்லும்படி எதாவது செய்ய வேண்டும் நினைக்கிறீர்கள். ஏன் நீங்கள் உங்கள் மனதுக்கு ஏதாவது செய்ய வேண்டும்? இதுவரை அப்படி ஏதேனும் செய்தீர்களா? இப்போது மட்டும் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?
            உங்கள் மனம் என்ற ஒன்று இல்லை. எந்த மனமும் நிலைத்து நிற்கக் கூடியதல்ல. சில நொடிகளில் மனதுக்காக காலத்தை இறுக்கிக் கட்ட நினைக்கிறீர்களே! அதற்குக் காலம் கொடுக்கும் பரிசுதான் சீரியஸ்.
            ஒன்றை குறையாக உணர்ந்தால் அது ஒரு பிரச்சனை. ஏன் குறையாக உணர்கிறீர்கள்? குறை குறையாக இருந்து விட்டுப் போகட்டும். எப்படி சரி செய்வது என்பது உங்களுக்குத் தெரியும். சரி செய்வீர்கள். குறையற்ற மனம் அப்படித்தான் செயல்படும். குறையென்று சொல்லிக் கொண்டு இராது.
            ஒருவரிடம் எதை எதிர்பார்க்கக் கூடாதோ, அதை தயவுசெய்து அவரிடம் எதிர்பார்க்காதீர்கள். பூக்கடையில் சென்று கருவாடு கேட்காதீர்கள். ஒருவரின் சுபாவத்திற்கு மாறானதைச் செய்யச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். அவரைத் தயவுசெய்து சமன்படுத்த நினைக்காதீர்கள். இந்த உலகமே சமனின்மையில்தான் இருக்கிறது.
            சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். தவறானவைகளைச் செய்யாமல் இருந்தால் போதுமானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
            எது சரி, எது தவறு என்று தயவுசெய்து கேட்காதீர்கள். அது உங்களுக்கு, உங்களைப் பொருத்த வரை உங்களுக்கு மட்டுமேதான்.
            உங்களுக்குள் ஒரு திருப்தியை உருவாக்கிக் கொள்ள போராடுகிறீர்கள் என்றால் நீங்கள் ஏன் ஓர் அதிருப்தியை உருவாக்கிக் கொண்டீர்கள்? தயவுசெய்து கேளுங்கள். தயவுசெய்து விடையை என்னிடம் சொல்லாதீர்கள். அந்த பதில் உங்களுக்கானது.உங்களுக்கேயானது.

*****

No comments:

Post a Comment