அமைதியாவது எப்படி?
எஸ்.கே.யின் பிரச்சனையில் எம்.கே. கதை
அளந்தான். கற்பனைக்கு எட்டாத நிஜங்களைச் சாத்தியம் என்றான். ஆனால் செய்யக் கூடிய சாத்தியங்களைச்
செய்யாமல் இழுத்து அடித்தான்.
அவன் மட்டும் மெளன்ட் ரோடு பக்கம் வந்தால்
அந்தக் காவாளியைப் பிடித்து விடுவேன் என்றான். அந்தக் காவாளியோ மெளன்ட் ரோடு பக்கம்
அசால்ட்டாக திரிந்தான்.
எல்லா இடங்களிலும் பணம் புகுந்து விளையாடுவதாக
தன் இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டான் எம்.கே.
இனி எம்.கே.வை நம்பிப் பிரயோஜனம் இல்லை
என்பதை எஸ்.கே. வெகு விரைவில் புரிந்து கொண்டான். ஏதாவது வித்தியாசமாக செய்து அந்தக்
காவாளியைப் பிடித்து விட வேண்டும் என்று எஸ்.கே. நினைத்தான்.
அவனுடையப் பாழாய்ப் போன மனதுக்கு எந்த
ஒரு யோசனையும் பிடிபடவில்லை. ஏதேனும் தோன்றினாலும் அதைச் செய்யும் தைரியமும், விவேகமும்
வரவில்லை.
எதையுமே செய்ய முடியவில்லையே என்ற இயலாமை
கோபமாக வெளிப்பட்டது. தயவுசெய்து கோபப்பட வேண்டாம் என்று அவன் தன் மனதிடம் மன்றாடிக்
கொண்டான்.
ஏனென்றால் கோபத்துக்கு அழிக்கத்தான் தெரியும்,
ஆக்கத் தெரியாது என்பது அவனது நம்பிக்கை. கோபத்துக்கு இழப்புகளை ஏற்படுத்தத் தெரியுமே
தவிர, இருப்பதன் அருமை தெரியுமா என்ன?
"இருப்பதைக் காக்க வேண்டும் (எஸ்.கே.யின்
இருப்பு) என்று நினைப்பவன் கோபப்படக் கூடாது, புத்தியைப் பயன்படுத்த வேண்டும், சிலவற்றைச்
செய்யாவிட்டாலும் பரவாயில்லை, தவறாகச் சிலவற்றைச் செய்து விட்டால்... அதன் விளைவுகள்
காலந்தோறும் பிரதிபலிக்கும், எல்லாருக்கும் இடையூறாக அமைந்து விடும்" என்று நினைத்து
எஸ்.கே. அதன் பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
"நம்பிக்கையோடும், பொறுமையோடும்
இருந்தால் எந்த தவறான ஒன்றிற்கும் ஆட்பட மாட்டாய், நம்பிக்கையின்மையும், பொறுமையிழப்பும்தான்
தவறான விசயங்களுக்கு ஆட்படுத்தி விடுகிறது" என்பதை நாறொன்றுக்கு நூறு தரம் மந்திரம்
போல் சொல்லிக் கொண்டு அமைதியினும் அமைதியாக இருக்கிறான் எஸ்.கே.
*****
No comments:
Post a Comment