18 Aug 2017

படிப்பவர்கள்(பாடப்புத்தகம்) கவனத்துக்கு!

படிப்பவர்கள்(பாடப்புத்தகம்) கவனத்துக்கு!
            நன்றாகப் படிக்கும் பிள்ளைகளைப் பாருங்கள். நிறையப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நல்லதுதான். அவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமே. அதுவே ஒரு கட்டத்தில் மனஇறுக்கமாக மாறி விடும். மனஇறுக்கமான நிலையில் தேர்வை எதிர்கொள்வது சிரமம். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் ஒரு கட்டத்தில் மோசமாகப் படிக்கும் மாணவர்களாக ஆவது இப்படித்தான்.
            மனஇறுக்கம் இல்லாமல் படிக்க வேண்டும். அதற்கு மனப்பாடச் சுமையைக் குறைக்க வேண்டும். புரிந்து கொள்ளுதல் மூலம் செய்திகளைக் கோர்வையாக்கி மொத்தப் பாடத்தையும் ஒரு புள்ளியில் கோர்த்துக் கொள்ளும் புத்திசாலித்தனம் படிக்க படிக்க வளர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் மேற்படிப்பு சுழியம் ஆவது உறுதி.
            ஜஸ்ட் பாஸ் போதுமானது. அந்த ஜஸ்ட் பாஸ் உங்கள் புரிதலின் மூலம் நிகழ்ந்திருந்தால் மனப்பாடத்தின் மூலம் கிடைத்த டிஸ்டிங்ஸனிலும் அது மேலானது.
            படிக்கும் போது நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று வெறித்தனமாக நினைத்துக் கொண்டு படிக்காதீர்கள். மற்றவர்களை விஞ்சி மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நெட்டுரு அடிக்காதீர்கள். தேர்வில் நீங்கள் எழுதும் ஒவ்வொன்றும் உங்கள் புரிதலிலிருந்து வந்து விழ வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள்.
            இயல்பாகப் படிக்க வேண்டும் என்பதை எப்போதும் விட்டுக் கொடுக்காதீர்கள். அவரவர் இயல்புப்படியான வாசிப்பே ஒவ்வொருவரையும் புதிய தளத்துக்கு இட்டுச் செல்லும். படிக்கின்ற, வாசிக்கின்ற ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாக உருவாக நாம் அச்சில் வார்த்துச் செய்யும் இயந்திரங்கள் அல்ல, மனிதர்கள்!
            உங்கள் தனித்தன்மை உங்கள் படிப்பின் மூலமும் வெளிப்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள். அதை மனப்பாடம் என்ற ஒற்றைத் தன்மையை மட்டும் கருத்தில் கொண்டு பலி கொடுத்து விடாதீர்கள். மதிப்பெண்கள் குறைந்தாலும் உங்களுக்கு எப்படிப் புரிந்ததோ, அந்த மாதிரியே உங்கள் பதில்களை வழங்குங்கள். நீங்கள் தைரியமான எதையும் அணுக அது அவசியம். அதுதான் வாழ்க்கையின் தேவையும் கூட.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...