3 Aug 2017

நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும் இசை அவர்களே!

நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும் இசை அவர்களே!
            'மாலை மலரும் இந்நோய்' என்ற தலைப்பில், காமத்துப் பால் கவிதைகள் என்ற துணைத் தலைப்போடு திருக்குறளின் காமத்துப் பால் குறித்து இசை என்பார் ஆகஸ்ட் 2017 காலச்சுவடு இதழில் 44 ஆம் பக்கம் முதல் 49 ஆம் பக்கம் வரை கட்டுரை வரைந்துள்ளார்.
            திருக்குறளுக்கு மற்றுமொரு நயம் புரட்டும் முயற்சி. அதுவும் குறிப்பாக காமத்துப் பாலுக்கு மட்டும் நயம் புரட்டும் முயற்சி என கட்டுரையின் நோக்கத்தை, "தமிழின் தலைசிறந்த கவிதைகள் என்று மெச்சத்தக்க பல கவிதைகள் காமத்துப் பாலில் உள்ளன. இத்தகைய புறக்கணிப்புகளில் அவை மங்கி விடக் கூடாது. எனவே அதில் கவனம் கொள்கிறது இக்கட்டுரை" என்ற வரிகளில் தெளிவுபடுத்துகிறார்.
            பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற குறட்பாக்களைத் தவிர, திருக்குறள் புத்தகம் என வாங்கி வாசிக்கத் துவங்கிய போது நான் காமத்துப் பாலிலிருந்துதான் துவங்கினேன். பிறகு கவியரசு கண்ணதாசன் அவர்களின் எழுத்துகளை வாசிக்கத் தொடங்கிய போது அவரும் இதே கருத்தை வலியுறுத்தியிருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டடேன். திருக்குறளை அறத்துப் பாலிலிருந்து வாசிக்க இயலாது போனால் காமத்துப் பாலிலிருந்து வாசிக்கத் துவங்கு என்பதாக அவரது கருத்து இருந்தது.
            அறத்துப் பால், பொருட்பால் போன்று காமத்துப் பால் குறட்பாக்களை அணுக வயது ஒரு தடை. குழந்தைகளுக்கு அது புரிய வேண்டிய அவசியம் இல்லை. வயதின் அடிப்படையில் இளமையில் கற்க வேண்டிய அறங்களையும், பொருளையும் கற்க, வாலிப வயது நெருங்கும் போது தானாகவே காமத்துப் பால் கற்பது நிகழும். வலிந்து கற்பதற்கான அவசியம் இல்லாத பால் அது. பொருள் தடுமாற்றங்களுக்கும் இடமில்லாத பால் அது. எல்லாம் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடுகள். காதல் கொண்டோர்க்கும், காதல் அரும்பும் பருவத்தினர்க்கும், காமத்தின் நுழைவாயிலில் நிற்போர்க்கும் அதன் சித்தரிப்புகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. காதலிக்கும் அனைவரும் மனதளவில் கவிஞர்களாகி விடுவதால் அதன் சாராம்சத்தைப் புரிந்து கொள்வதில் எந்த தடையும் இருக்க முடியாது.
            அறம், பொருள் சார்ந்த கருத்துகளை வள்ளுவர் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதியிருக்கலாம். காமம் சார்ந்த கருத்துகள் அனுபவ நுட்பத்தின் அடிப்படைகள் கொண்டவை. காமத்தை ஆராய்வதை விட அனுபவிப்பது முக்கியம் என்பதை வள்ளுவரின் குறட்பாக்களின் வாயிலாக அறியலாம். இசை தனது புரிதலின் போக்கில் ஒரு கட்டுரை வழங்கியிருக்கிறார். மற்றபடி காமத்துப் பால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என்பது போன்ற அவரது தோற்றம் மாயத் தன்மை வாய்ந்தது. அவரது கருத்துப்படி கல்லூரி வகுப்பறைகளில் காமத்துப் பால் குறட்பாக்கள் அதிக விவாதத்திற்கு உள்ளாகாமல் இருக்கலாம். அதுவும் சரியானதா என்பது தெரியவில்லை. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப்படும் என்ற ஒரு குறட்பாவை மணிக் கணக்கில் விளக்கிய பேராசிரியர்களை நான் பார்த்திருக்கிறேன். கல்லூரி வகுப்பறைகளுக்கு வெளியே அதிக விவாதத்திற்கு உள்ளாவதும், மென்‍மேலும் உட்பொருள் காணப்படுவதும் காமத்துப் பால் குறட்பாக்கள்தான். அறமும், பொருளும் மதிப்பெண்களுக்காகப் படிக்கப்படலாம் அல்லது படிக்கப்படாமலே போகலாம். காமத்துப் பால் குறட்பாக்கள் அப்படியல்ல, உள்ளார்ந்த விருப்பத்தன் பெயரில் பகுதியாகவோ, முழுமையாகவோ படிக்கப்பட்டும், பேசப்பட்டும் கொண்டுமிருக்கின்றன.
             மறைக்கப்படுபவைகள், இந்த வயதில் அதிகம் வாசிக்கப்பட வேண்டாம் என்று சொல்லப்படுபவைகள் அதிகம் வாசிக்கப்படுகின்றன என்பதையும் இசை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆய்வு நோக்கிலும் காமத்துப் பால் குறட்பாக்கள்  ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதன் உளவியல் நோக்கு பெரும் வியப்பூட்டுபவை.
            கட்டுரையின் மற்றப் பகுதிகள் பெரும்பாலும் இசையின் புரிதலின் வியப்பையும், கூறியது கூறல் மற்றும் நயமின்மை என்பது போன்ற சில சங்கதிகள் பக்கம் பொகின்றன.
            கட்டுரையின் முடிவு அன்றைய மற்றும் இன்றைய காதலர் முரண் பற்றிப் பேசுகிறது. இன்றைய காதலர்களிடம் ஊடல் விவகாரத்தாகலாம். ஊடலின் இன்பம் அறியாதவர்கள் அவர்கள். பசலை என்பது பழங்கனவாகலாம். பசலை என்பது ஒரு குறியீடு. பிரிவின் குறியீடு. அன்றைய சூழலில் இல்லாத வீடியோ கால்கள் இன்றைய சூழலில் இருக்கின்றன. பசலையின் குறியீட்டு வடிவங்களில் மாற்றம் இருக்கலாம். ஆன்ட்ராய்டுகள் நம் உரையாடலை இன்னும் அதிகப்படுத்தியிருக்கின்றன. இசையிடம் நான் சொல்ல விரும்புவது நாம் இன்னும் அதிகம் உரையாடலாம் என்பதே. திடுதிப்பென்று நாம் ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டிய அவசியம் இல்லை.
            மிக நீண்ட காலம் காமத்தின் வெளிப்பாடான இன்பத்தை மட்டும் தேடி ஓடிக் கொண்டிருக்க யாராலும் முடியாது. அதன் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாட்டை எப்பேர்பட்ட மனமும் ஒரு கட்டத்தில் தேடச் சொல்லும். அந்தக் காலகட்டத்ததைக் குறள் படிப்பதன் மூலம் மிக நீண்டதாக ஆகாமல் சுருக்கலாம். மற்றபடி குறள் படிக்காவிட்டாலும் அந்தக் காலகட்டத்தை சற்று தாமதமாகவேனும் மனிதன் அடைந்துதான் ஆக வேண்டும்.
            எந்த நூலும் நுட்பமான உண்மைகளை உணர்த்தவே முடியும். வாசிக்கின்ற மனம்தான் அதை உணர்ந்து பார்க்க வேண்டும். திருக்குறளும் இதற்கு விதிவிலக்கன்று. மனதைச் செம்மைபடுத்துவது அதன் முக்கிய நோக்கம். செம்மை அடையும் வகையில் ஆழ்ந்து பார்க்கும் அவரவர் முயற்சியும், ஆர்வமும் கொஞ்சம் தேவைப்படும். சுற்றியிருக்கின்ற நாம் சற்றுத் தூண்டி விடலாம். இல்லையேல் நாம் அவர்களுக்காக சிறிது காத்திருக்கத்தான் வேண்டும்.
            இசைக்குப் பதினோரு மணிக் காட்சி அவரது காம இன்பத்தைச் சிதைக்காத போது, ஆன்ட்ராய்டுகள் மட்டும் எப்படி காமத்தின் இன்பத்தைச் சிதைக்க முடியும்? காமம் அதன் இன்பத்திற்காகத்தான் துய்க்கப்படுகிறது. துய்க்கப்பட்ட பிறகும் அது தெவிட்டாமல், மீண்டும் மீண்டும் துய்ப்பதற்கான வழிமுறைகளை குறள் சொல்கிறது. துய்த்தப் பிறகு எண்ணிப் பார்க்கும் இன்பம் காம இன்பத்தை விட பெரிதாக இருப்பதைக் குறள் சுட்டுகிறது.
            மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படுவார் என்று வள்ளுவரே குறிப்பிடுகிறார். நுட்பமான தன்மையில் புலப்படும் உண்மை இது. ஒத்த மனம் என்பது கை கூடும் இடம் அது. காமத்தின் செவ்வியைத் தலைப்படுவது முக்கியம். அது ஒரு பக்குவம். அது படிப்படியாகத்தான் கூடுகிறது. அந்தப் படிநிலைகளை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் குறட்பாக்கள் அமைவது அதன் சிறப்பு. நுண்ணியர் என்பவர் அத்தகையரே. இசை பகடி செய்வது போல நிஷா-உஷா-சுரேஷ்-ரமேஷ் அல்லர். அவர்களும் அப்படிப்பட்ட நுண்ணியராக வேண்டும். அதற்கு இசை சொல்வது போல பேருந்துகளில் அல்லாமல், அவரவர் கார்களில், இரு சக்கர வாகனங்களில் ஒரு காமத்துப் பால் குறட்பாவை எழுதி வைத்துக் கொள்ளலாம். பேருந்து எனும் பொதுப் போக்குவரத்தை விட, கார் மற்றும் இரு சக்கர வாகனம் போன்ற தனிநபர் போக்குவரத்துதானே இப்போது அதிகம் பெருகியிருக்கிறது. விருப்பப்பட்டால் அவரவர் டெஸ்க் டாப், லேப் டாப், மொபைல் ஸ்கிரீன் சேவர்களாகவும் எழுதி வைத்துக் கொள்ளலாம். யாதொரு தடையுமில்லை.
            இக்கட்டுரை இசையின் கட்டுரைக்கு மறுவினையான ஒரு முடிந்த முடிவன்று. ஒரு உரையாடல் அல்லது ஒரு விவாதத்தின் தொடக்கம் மட்டுமே. காமம் சார்ந்து நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது என்பது அவரது கூற்றுப்படி உண்மையே. அதுவும் வள்ளுவரின் காமத்துப் பாலில் மையம் கொண்டு துவங்கியிருப்பது மகிழ்ச்சியே.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...