நான் எழுத்தாளன் பேசுகிறேன்!
சில நாட்களாகவே
எஸ்.கே.யின் படைப்புகள் இருட்டடிப்புச் செய்யப் படுகின்றன. எந்தப் பத்திரிகையிலும்
அவன் படைப்புகள் வருவதில்லை. அவனைப் படிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டு
வருகிறது.
ஆனாலும் எஸ்.கே.
மகிழ்ச்சியாக இருக்கிறான். "இப்படியாக... என் எழுத்துகளைப் படித்து துன்புறுபவர்களின்
எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவது நல்லதுதான்!" என்கிறான்.
"நான்
எழுதுவதன் மூலம் என்ன சாதித்தேன்? எதுவும் இல்லை. ஆனால் எழுதுவதே ஒரு சாதனைதான். அதைக்
கொண்டு எதையும் சாதிக்க வேண்டியதில்லை. எழுதிக் கொண்டே இருப்பேன். அது ஒரு கலை. அது
தானாக வருகிறது. வந்து விட்டுப் போகட்டும்.
"நான்
பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டும் என்று எழுத ஆரம்பிக்கவில்லை. அதுவும் அல்லாமல் எழுதுவதற்கு
ஒரு வாய்ப்பாக இருக்கிறது என்பதற்காகத்தான் மளிகைக் கடை ரோக்கா போடுவதாக இருந்தாலும்
உட்கார்ந்து மாய்ந்து மாய்ந்து எழுத ஆரம்பித்தேன்.
"எழுத
வேண்டும் என்பதை ஒரு சாக்காக வைத்து கொஞ்சம் எழுதுவேன் என்பது எழுதுவது குறித்த என்
சாக்கு. அது போதும். ஓரளவுக்கு எழுதுகிறேன். அதற்கு மேல் எதிர்பார்ப்பதில்லை.
"இந்த
அளவே போதும் என்ற மனப்பான்மையினாலேயே நான் எழுத்தில் அதிகம் வளரவில்லை என்று சொல்பவர்கள்
இருக்கிறார்கள். என்ன செய்வது? கிடைப்பதே போதும் என்று நினைப்பது கால்சட்டையில் உச்சாப்
போகும் அந்தக் காலத்திலிருந்தே ஒரு பழக்கமாகி விட்டது."
அதுவும் இல்லாமல்
பெர்னாட்ஷா போன்ற மாபெரும் எழுத்தாளர்களே பல ஆண்டுகள் கடின முயற்சிக்குப் பின், பல
தோல்விகளுக்குப் பின் எழுத்தாளராக அறியப்பட்டு இருக்கிறார்கள். எஸ்.கே.வாகிய நான்
எம்மாத்திரம்?
*****
No comments:
Post a Comment