21 Aug 2017

இப்படித்தான் மனிதர்கள்!

இப்படித்தான் மனிதர்கள்!
            எஸ்.கே. அதிகப்படியான செயல்பாடுகளில் இறங்கக் கூடியவன். அதையே அவனுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்.
            வேலைகளைத் தேவையில்லாமல் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வான். ஒரே நேரத்தில் பலவகைப் பயிற்சிகளைச் செய்வான். பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வான். இரட்டை வேலைகளைச் செய்வதில் அலாதி ஆர்வம் அவனுக்கு.
            அப்படி அவன் செய்ய வேண்டியதில்லை. அது தேவையற்றது, அநாவசியம்.
            ஒருமுறை நூறு ரூபாய் கொடுக்க வேண்டிய ஆட்டோ கட்டணத்திற்கு அவன் நூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தான். ஆட்டோக்காரர் அவனைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தான். ஒருவர் இவனைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும் என்பதை இவன் தீர்மானிக்க முடியாது என்பது புரியாமலே இப்படிப்பட்ட அடாவடித்தனங்களில் அவன் அடிக்கடி இறங்குவான்.
            மற்றொரு முறை நியாயமாக ஐம்பது ரூபாய் கொடுக்க வேண்டிய ஆட்டோ கட்டணத்திற்கு இருபது ரூபாய்தான் கொடுப்பேன் என்று பேரம் பேசி மல்லுகட்டிக் கொண்டிருந்தான். பேசிச் சலித்த ஆட்டோக்காரர் கட்டணமே வேண்டாம் என்று சென்று விட்டார். அப்போது அந்த ஆட்டோக்காரர் இவனைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?
            எஸ்.கே. அந்த ஆட்டோக்காரர் தன்னைப் பற்றி நல்லவிதமாக நினைக்க வேண்டும் என்பதற்காக நாற்பது ரூபாய்க்கு அர்ச்சனை தட்டு வாங்கிக் கொண்டு, பத்து ரூபாய் அர்ச்சகருக்கு வைத்து கடவுளிடம் பூசித்து நெடுநேரம் மனமுருகி வேண்டிக் கொண்டான்.
            இப்படியெல்லாம் செய்யக் கூடியவன்தான் எஸ்.கே. அவனைப் பொறுத்துக் கொண்டு அவனோடு வாழ்கிறார்களே, அவர்களைச் சொல்ல வேண்டும்.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...