3 Aug 2017

பேச்சின் ரகசிய விதிகள்

பேச்சின் ரகசிய விதிகள்
            பேச்சுகள் மென்மேலும் பிரச்சனைகளை வளர்ப்பதாக உள்ளது. சிறிய குழப்பத்தையும் பெரிதுபடுத்தி விடுகிறது. பேச்சு என்பது சுருக்கமாகவும், தெளிவாகவும் அமைய வேண்டும். வளவளவென்று பேசுகிறோம். தேவையற்ற வார்த்தைகள் அதில் நிறைய. பேசுவதில் தேவையற்ற வார்த்தைகளைத்தான் கேட்பவர் அதிகம் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை கணிக்கத் தவறி விடலாம். அந்தத் தேவையற்ற வார்த்தைகளிலிருந்து விவாதம் வளர்கிறது. முடிவில் பேச வந்தததன் நோக்கம் மாறி எதிர் நிலையில் மையம் கொண்டு அர்த்தம் இழந்து போகிறது.
            வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போது ஒரு விசயத்தைக் கவனிக்க வேண்டும். கேட்பவர் பேசுபவரின் வார்த்தைகளையும், தன்னுடையை மனநிலையையும் தொடர்புபடுத்திக் கொண்டு இருக்கிறார்.
            பேசுபவர் குறிப்பிடும் அர்த்தம் ஒன்றாகவும், கேட்பவர் கொள்ளும் அர்த்தம் வேறாகவும் அமையுமானால் பேச்சின் நோக்கம் அரோகராதான்.
            ஒருவரின் மனநிலையை மதிப்பிட்டுக் கொண்டுதான் அவரிடம் எப்படிப்பட்ட விசயங்களைப் பேச வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் எவ்வளவு அர்த்தமுள்ள பேச்சும் அர்த்தமற்றதாகி விடும்.
            இது போன்ற சிக்கல்களை எதிர் கொள்ள குறைவாகப் பேச வேண்டும். குறைவாகப் பேசினால் பாதிப்புகளும் கம்மி. அர்த்தங்களும் பல தன்மைகளோடு விரியும். நிறையப் பேசும் போது அர்த்தம் ஒரு குறிப்பிட்ட தன்மையை நோக்கிச் செல்லும் என்பதை மறந்து விடக் கூடாது.
            பேச்சில் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம் என்னவென்றால், ஒருவனைப் பேச விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், அவனை ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். ஒருவனை ஆழம் பார்க்க இன்னொருவனை நியமிக்கத் தேவையில்லை. அவனைப் பேச விட்டாலே போதும். அவனே அவனையறியாமல் உளறிக் கொட்டி விடுவான்.
            பல நேரங்களில் பேசாமல் இருப்பதே பலம். அதிக பலன் தரும். ஒருவனை ஆழம் பார்க்க முடியாத வரைக்குத்தான் அவனுக்கு மதிப்பு. ஆழம் தெரிந்து விட்டால் கிடைக்கும் மரியாதை ஒரு தினுசாகத்தான் இருக்கும்.
            என்னதான் பேசினாலும், விளக்கம் கொடுத்தாலும் அடிமனதில் உள்ளவைகளை வெளிக்காட்டி விடக் கூடாது. அது தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் கொள்ளி போன்றது. அதை வைத்துதான் எதிரிகள் ஒருவனோடு விளையாடுவார்கள். கூட இருப்பவர்களே குழி பறிப்பார்கள். ஆகவே ஆழ்மனதை யாரிடம் வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது மற்றும் பாதுகாப்பானது.
            கடைசியாக முக்கியமான ஒரு குறிப்பு என்னவென்றால், சிலர் இருப்பார்கள், அவர்களிடம் செயல்பாடே இருக்காது. அப்படிப்பட்டவர்களிடம் பேசாமல் இருக்க வேண்டும். அவர்களிடம் பேச நினைத்தால் பேசுபவன் சிறுமைபட்டுப் போவதோடு, அவன் எண்ணங்களும் சிறுமைபட்டுப் போகும். பேசா இடங்களும், பேசக் கூடாத மனிதர்களும் உண்டு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...