2 Aug 2017

வாசிப்பைச் சுவாசிப்போம்!

வாசிப்பைச் சுவாசிப்போம்!
            நூற்கப்படுவது நூல். பஞ்சிலிருந்து நூற்கப்படுகிறது பருத்தி நூல். இழைகளிலிருந்து நூற்கப்படுகிறது சணல். மனித மானத்தைக் காக்கும் ஆடையின் அடிப்படை நூலே.
            புத்தகம் எனப்படும் நூலும் நூற்கப்படுவதுதான். அனுபவங்களிலிருந்து, அறிவின் முடிபுகளிலிருந்து நூற்கப்படுகிறது. மனித மாண்பைக் காக்கும் பண்பாட்டின் அடிப்படை நூலே.
            நூலென்னும் கூட்டுறவால் ஆன துணியால் தைக்கப்பட்ட ஆடையில்லா மனிதன் அரை மனிதன். நூலென்னும் அறிவால் அன பக்கங்களால் தைக்கப்பட்ட புத்தக வாசிப்பில்லா மனிதன் குறை மனிதன்.
            குறைகளைக் குறைத்து, நிறைகளை நிறைப்பது நூல்களே. அறியப்படாத விழுமியங்களை, தெரியப்படாத செய்திகளை, புரியப்படாத வாழ்வின் முடிச்சுகளை அறியச் செய்வதும், தெரியச் செய்வதும், புரியச் செய்வதும் புத்தகங்களே.
            கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தமிழ் நிலத்தில் மனிதன் தோன்றி விட்டான். அவன் தோன்றிய காலத்தே அவனோடு நூல்களும் தோன்றி விட்டன. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று இருந்த சங்கங்கள் அதற்குச் சான்று.
            முதலிரண்டுச் சங்கங்களைச் சார்ந்த நூல்கள் அழிந்த போது கடைச்சங்க நூல்கள் அழியாமல் நம் கைகளில் கிடைப்பதற்குக் காரணம் வாசிப்பின் மீதிருந்த நேசிப்பே காரணம்.
            வாசிப்பின் மீது நேசிப்போடு தமிழ்ச் சமூகம் இருந்தது என்பதற்குச் சான்று பகர்பவைகளே எட்டுத் தொகையாகவும், பத்துப் பாட்டாகவும், பதினெண்கீழ்க் கணக்காகவும் தொகுக்கப்பட்ட தொகுப்பு நூல்கள்.
            மரபார்ந்த அறிவுச் செல்வங்கள் நிரம்பிய அறிவுச் சமூகமாக நாம் இருந்திருக்கிறோம் என்பதற்கு சங்க நூல்கள் அழிக்க முடியாத ஆதாரம். மன்னர் முதல் குடிபடைகள் வரை வாசித்து இருக்கிறார்கள் என்பதற்கு புறநானூற்றின் இடம் பெறும் மன்னர் முதல் குடிமகன்களாகத் திகழ்ந்த புலவர்கள் வரை இயற்றியப் பாடல்கள் சாட்சியம் சொல்கின்றன.
            காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பத்திகள் என்று இன்றைய சுட்டுரைகள், முகநூல் பதிவுகள், கட்செவியஞ்சல் செய்திகள் என்று அனைத்தும் வாசிப்பிற்கான தொடர் மரபை நிலைநாட்டுகின்றன.
            வாசிப்பு வீழ்ந்து விட்டதாக சிலர் கருதுவதில் பிழையில்லை என்றாலும், வாசிப்பு இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. வாசிக்கும் வடிவங்கள் மாறிக் கொண்டு இருக்கின்றன. புத்தக வாசிப்பு என்பது முகநூல் வாசிப்பாக, சுட்டுரை வாசிப்பாக, கட்செவியஞ்சல் வாசிப்பாக, வலைப்பூக்களின் வாசிப்பாக, பி.டி.எப். மற்றும் மின் நூல்களின் வாசிப்பாக அது தகவல் தொழில் நுட்பத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வேறு வேறு பரிமாணங்களில் விரிந்து கொண்டு இருக்கிறது. என்றாலும் புத்தக வாசிப்பு என்பது இவைகளால் தர முடியாத ஓர் அனுபவ சுகத்தை மயிலிறகால் மனதை வருடுவது போல மனதோடு அன்றும் இன்றும் என்றும் இதந் தருவதாக இருக்கிறது.
            மாளிகை போன்ற வீடு போல இன்றைய வாசிப்பு நிலை உள்ளது. மாளிகையின் அனைத்து அறைகளும் பயன்பாட்டில் இருப்பதில்லை. பல அறைகள் பூட்டியே கிடக்கின்றன. விழாக்களின் போதும் சடங்குகளின் போதும் சம்பிரதாயத்திற்காக திறக்கப்படும் மாளிகை அறைகளைப் போல வாசிப்பு என்பதும் ஒரு சம்பிரதாயமாக மாறிக் கொண்டு இருக்கின்றது. மாளிகையின் ஒரு சில ‍அறைகள் மட்டும் பயன்பாட்டில் இருப்பது போல, பாடபுத்தகங்கள் மட்டுமே பலரது வாசிப்பு அனுபவமாக இருக்கிறது. கட்டிய வீட்டின் நோக்கம் அதன் அனைத்து அறைகளும் பயன்பாட்டில் இருக்கும் போதுதான் நிறைவு பெறுகிறது. வாசிப்பின் நோக்கமும் பாடநூல்களைத் தாண்டி பலதரப்பட்ட நூல்களை வாசிக்கும் போதுதான் நிறைவு பெறுகிறது. நமது வாழ்வெனும் மாளிகையில் பாடப்புத்தகங்கள் எனும் அறைகள் மட்டும்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை திறந்து கிடக்கிறது. பிறகு அந்த அறைகளும் மூடப்பட்டு விடுகின்றன.
            பாடநூல்களைத் தாண்டி வாசிப்பு விரியாத காரணத்தால்தான் படித்தச் சமூகம் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தில் தனி மனித அறம், சமூக அறம் ஆகியவை பின்னுக்குத் தள்ளப்படுகிறது. படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் ரொம்ப சாமர்த்தியமாக முதியோர் இல்லம் பெருக காரணமாக இருக்கிறார்கள்.
            அலுவலகங்களில் இருப்பவர்கள் படித்தவர்களாக இருந்த போதும் அங்கு ஊழல் காற்றைப் போல நடமாடுவதாக, லஞ்சம் நிகழ்த்துக் கலை போல நிகழ்த்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதற்கும் வாசிப்புக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். வாசிப்பு என்பது விரிவான தளத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது. பரந்த மனநிலையை அது உருவாக்குகிறது. குறுகிய மனப்பான்மையை உடைத்தெறிகிறது. சின்ன சின்ன சுயநலங்களைக் கேலி பேசுகிறது. தியாகங்கள் செய்வதில் பிழையில்லை என்பதை வற்புறுத்துகிறது. மனதில் வற்றிப் போய்க் கொண்டிருக்கும் மானுடத்தைச் சுரக்கச் செய்கிறது. அரசின் சட்டதிட்டங்களும், லஞ்ச ஒழிப்பு முயற்சிகளும் தோற்றுப் போகும் இடைவெளியை வாசிப்பு அனுபவம்தான் மாற்ற முடியும். லஞ்சம் வாங்காதே என்று கட்டுப்படுத்தும் ஒரு சட்டத்தை விட, லஞ்சத்தின் பாதிப்புகளைச் சொல்லும் ஒரு சிறுகதையோ, நாவலோ லஞ்சம் புகுந்த மனதில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதற்கு வாசிப்பு அனுபவம் சிலாகிக்கப்பட வேண்டும். அதன் மேன்மைகளை உணரும் வகையில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
            இந்த உலகில் ஒத்துப் போகாத இரண்டு இனங்கள் இருப்பதாகக் கொண்டால் பல குடும்பங்களில் காணப்படுவது போல மாமியார் - மருமகள் இனம்தான் அது. இவர்களிடம் புரிதலை நிகழ்த்துவது சாத்தியம் இல்லாதது போலத் தோன்றினாலும் ஒரு சிறுகதை அத்தகைய சாத்தியத்தை நிகழ்த்தி விடும் வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி ஒரு சிறுகதையை வாசிப்பதற்கான வாசிப்புப் பழக்கம் ஒரு குடும்பத்தில் இருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனை மட்டுந்தான் இங்கு தேவைப்படுகிறது.
            தொலைக்காட்சி நெடுந்தொடர்களைப் பார்த்து அதைப் பற்றி பேசி அதில் ஒரு இன்பம் காண்பது போல, வாசிப்புப் பற்றி பேசி அதில் ஒரு இன்பம் காணும் மனநிலையை நம் சமூகத்தில் உருவாக்கி விட்டால் தமிழ்ச் சமூகத்தின் வெற்றியை எச்சமூகத்தாலும் தடுத்து விட முடியாது.
            தந்தை - மகன், மகன் - தந்தை என்று நீடிக்கும் தலைமுறைச் சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்த்து எடுப்பதற்கும், அதை புரிய வைப்பதற்கும் வாசிப்பு அனுபவங்கள் மிகப் பெரிய அளவில் கை கொடுக்கும். கொஞ்சம் நுட்பமாக யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்க வரும். வாசிப்பு அனுபவம் குறைவதே மனம் சுருங்குவதற்கும், எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனநிலை உருவாவதற்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. வாசித்துக் கொண்டிருக்கும் மனம் தெளிந்த நீரோடை போல ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த மனதில் தேங்கி நிற்கும் குட்டையைப் போன்ற பாசி பிடிப்பது இல்லை.
            ஜல்லிக்கட்டுக்குத் திரண்ட எழுச்சி நீட் தேர்வுக்கு இன்னும் தமிழகத்தில் எழவில்லை. பெரியாரின் இடஒதுக்கீடு குறித்தும், அம்பேத்காரின் சாதியச் சமூகம் குறித்தும் நாம் வாசிக்காததன் விளைவுகள் என்று அதை ஒரு காரணமாக சுட்டக் கூடிய அளவுக்கு வாசிப்புத் தளம் தமிழ்ச் சமூகத்தில் சுருங்கிக் கிடக்கிறது. இட ஒதுக்கீட்டில் நிகழும் மறுப்பு ஒரு சாதியச் சமூகத்தை பின்னுக்குத் தள்ளும் என்று நிலைமை மாறி, நீட் தேர்வு இன்று தமிழகத்தையே பின்னுக்குத் தள்ளும் என்ற நிலை உருவாகியிருப்பதைப் பரவலாக உணர்வதற்கான வாசிப்புக் களம் வற்றிக் கிடக்கிறது.
            அரசுப் பள்ளிகள் வீழ்ந்து கொண்டிருக்க, தனியார்ப் பள்ளிகள் ஓங்கிக் கொண்டிருக்கக் காரணம் என்ன என்று விடை காண,  கல்வி குறித்த வாசிப்பு அனுபவம் நமக்கு இல்லை என்பதை பொட்டில் அடித்தாற் போல சொல்ல எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை.
            ரூசோ பேசும் கல்வி குறித்தும், மாண்டிசோரி சொல்லும் கல்வி குறித்தும், காந்தியும் விவேகானந்தரும் பேசும் கல்வி குறித்தும் நாம் இன்னும் பாடநூல் வாசிப்பு என்ற மனப்பாட வாசிப்பைத் தாண்டி, அதை விவாதிக்கும் வாசிப்பு அனுபவத்திற்கு வராமல் இருக்கிறோம். விளைவு, கல்வியையும் கடைச்சரக்காக்கி நம்மிடம் காசு பார்க்கும் நிலை இன்றைய சமூகத்தில் காணப்படுகிறது. பிச்சைப் புகினும் கற்கை நன்று என்றாலும், மனிதனின் கடைசிச் கொட்டு தன்மானம் வரை அடகு வைத்து பிள்ளைகளுக்குக் கொடுக்கும் கல்வி அவர்களை எதிர்காலத்தில் எந்த அளவுக்கு முதுகெலும்பு உடைய உயிரிகளாய் மாற்றும் என்ற கேள்விக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது?
            நம் சமூகத்தில் புத்தக வாசிப்பிற்கும், மது விற்பனைக்கும் கூட தொடர்பு இருக்கிறது. ஒரு புத்தகத்தை எழுபது ரூபாய் கொடுத்து வாங்க யோசிப்பவர்கள்தான், சர்வ சாதாரணமாக நூறு ரூபாயைக் கொடுத்து ஒரு குவார்ட்டரை வாங்கிக் குடிக்கிறார்கள். மதுக்கடை திறக்காத நாட்களில் அதை விட கூடுதலாக விலை கொடுத்து வாங்கிக் குடிக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
            புத்தக விற்பனை எந்த அளவுக்கு மிக குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மிக அதிகமாக மது விற்பனை இருக்கிறது. அரசுப் பேருந்து நிலையங்களில் வாடகைக்கு விடப்படும் கடைகளில் கட்டயாம் ஒரு கடை புத்தகங்கள் விற்பனையகத்திற்கு வாடகைக்கு விடப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது என்ற தகவல் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நாம் அதை தெரிந்து கொள்ளாமல் போனதற்கு வாசிப்புப் பழக்கம் அந்த அளவுக்குப் பின்தங்கியிருப்பதான் காரணமாக இருக்கிறது.
            இந்தச் சமூகத்தில் மதுப்புட்டிகள் விற்கும் அளவைத் தாண்டி புத்தகங்கள் விற்பனையாக வேண்டும். ஓர் அறிவார்ந்த சமூகத்தின் அடையாளம் அதுதான்.
            இந்த சமூகத்தில் யார் வேண்டுமானால் அரசியலுக்கு வரட்டும். ஆனால், இன்னும் ரஜினியா? கமலா? என்று ஒற்றையா ரெட்டையா போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை பல கேள்விகளை எழுப்புகிறது. ஏன் நம்மாழ்வாரை ஒரு முதலமைச்சராக்கியிருக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றாமல் போனது? பொது வாழ்வில் மிக தூய்மையாக செயல்படும் நல்லக்கண்ணு ஐயாவை முதலமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணம் ‍தோன்றவில்லை. அதே நேரத்தில் அடுத்த முதல்வர் கமலா? ரஜினியா? என்று ஆரூடம் பார்ப்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறோம். வாசிப்புத் தளம் சரிந்து மித மிஞ்சிய சினிமா மாயை மிகுந்த சமூகத்தில் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான கணிப்புக்குறி இது.
            ஒரு சினிமா டிக்கெட் 100 க்கும், 200 க்கும் விலை போகிறது. சமயங்களில் 1000 க்கும், 2000 க்கும் கூட அநாயசமாக விலை போகிறது. புத்தகங்கள் 50 க்கும், 100 க்கும் விலை போவது பெருங்கனவாக இருக்கிறது. அதனாலே நம் சமூகத்தில் நல்ல மாற்றங்களும் பெருங்கனவாகவே இருக்கிறது.
            புத்தகங்களை வாங்குவதற்கு முன் எப்போதும் ஒரு கேள்வி முன் வந்து நிற்கிறது? எவ்வளவு டிஸ்கெளண்ட் என்று. இதே கேள்வி ஒரு குவார்டடர் வாங்கும் போதும், ஒரு சினிமா டிக்கெட் வாங்கும் போதும், எவ்வளவு டிஸ்கெளண்ட் என்ற கேள்வியாக முன் வந்து விட்டால், நாம் வாசிப்பிற்கான தளத்தை அடைந்து விட்டோம். அந்தத் தளத்தை அடைவதற்கான பாதை மிக நீண்டதாக இருக்கிறது. அதுவும் வாசிப்பைப் பொருத்த வரையில் மண்டியிட்டு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். நமக்கு அதை அடைவதற்கான கால அளவும் அதிகம். தத்தி தத்தி நடக்க‍ வேண்டும், பின் நன்கு நடை பழக வேண்டும், அதன் பின் ஓட‍ வேண்டும். வாசிப்பிற்கான அந்தத் தளத்தை நாம் அடையாது போனால் நாம் எழுத்துக் கூட்டிக் கற்றதற்கு எந்தப் பயனும் இல்லாமல் போகலாம். நாம் எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றது வெறும் பாடப்புத்தகத்திற்கும், வேலை வாய்ப்பிற்கும்தான் என்றால் நம்மால் நமக்கு ஏற்படும் பேரழிவை யாராலும் தடுக்க முடியாது. ஒரு பேரழிவிற்கு எதிரான மாபெரும் தடுப்பு நிச்சயம் வாசிப்புப் பழக்கம்தான். நல்ல பழக்கங்கள் நம்மை தாங்கி நிற்கின்றன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
*****
(01. 08. 2017 மன்னார்குடி, குமாரசாமி திருமண அரங்கில் வேர்ட்ஸ்வொர்த் புத்தக நிலையம் மற்றும் விகடன் பிரசுரம் இணைந்து நடத்தும் ஒன்பதாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நிகழ்வில் கட்டுரையாற்றியதன் எழுத்து வடிவம்)


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...