23 Aug 2017

வேடிக்கை மனிதன் என்று நினைத்து விட்டாயோ?!

வேடிக்கை மனிதன் என்று நினைத்து விட்டாயோ?!
            எழுத்து என்பது எஸ்.கே.வை வெளிக்கொணர்கிறது. அதற்காகவே எழுதுகிறான். மற்றபடி பிரசுரங்களுக்காக எழுதுகிறான் என்றால் அவன் எழுதுவதையே எப்போதோ விட்டிருக்க வேண்டும்.
            பிரசுரம் ஆவதிலும் பிரச்சனைகள் இருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை விட, தேர்ந்தெடுக்கப்படாத படைப்புகளே அதிகம். பிரசுரத்திற்காக பத்திரிகைகள் வழங்கும் சன்மானமும் சொற்பமே. பேனா, மை வாங்குவதற்குக் கூட அந்தத் தொகை போதாது.
            ஆத்ம திருப்திக்காக எழுதுகிறான் எஸ்.கே. அதனால் அவன் பத்திரிகை பிரசுரங்களை அவன் இலக்காகக் கொள்வதில்லை. பத்திரிகைகளும் அவனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.
            இவனோடு டுக்கா, அவனோடு பழம்! அவ்வளவுதான் கணக்கு சரியாகி விட்டதா? இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது எஸ்.கே.வின் பிழைப்பு.
            எஸ்.கே. எழுத்தோடு இப்படிப் போராடி மாரடிப்பது ஒரு பக்கம் என்றால் அவனது மறுப்பக்கம் அவன் ஒரு பொதுநல விரும்பி வகையறா போராளி. அதனால் எஸ்.கே.யின் வாழ்க்கை ஒரு வழக்கைப் போன்றதாக இருக்கிறது. அந்த வழக்குகளில் அவனுக்கு இருவிதமான எண்ணங்கள் ஏற்படுகின்றன.
            ஒரு விதமாக யோசிக்கும் போது வழக்கை முறையாக வழக்காட வேண்டும் என்று நினைக்கிறான். முறையாக வழக்காடி தவறு செய்தவர்களுக்குத் தண்டனை (!) வாங்கித் தர வேண்டும் என்று நினைக்கிறான். அதற்கு சில, பல பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதை எஸ்.கே.யின் மனம் ஒப்ப மறுக்கிறது.
            மறுவிதமாக யோசிக்கும் போது வழக்கிற்கான இழப்பீடுகளைத் தருவதாக எதிர்தரப்பு சமாதானம் பேசும் போது அதை வாங்கிக் கொண்டு வழக்கை முடித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்பது போல தோன்றுகிறது.
            ஆத்திரம் எஸ்.கே.யின் கண்களை பல நேரங்களில் மறைத்து விடும். ஆத்திரமான உணர்ச்சிவசப்பட்ட முடிவை விட புத்திசாலித்தனமாக முடிவே சரியானதாக இருக்கும் என்பதை எஸ்.கே. புரிந்து கொள்ள முயன்று பார்க்கிறான். ஆனால் முடியவில்லை.
            வழக்கைத் தொடர்ந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதும் கேள்விக்குறியே. சாதகமாகவும் அமையலாம். பாதகமாகவும் அமையலாம். விளைவுகள் என்பது அவரவர் முடிவு சார்ந்தது. அதில் யாரும் குறுக்கிட முடியாது.
            ஒருவரின் முடிவில் ஓவராக யாரும் குறுக்கிட முடியாது. இது எஸ்.கே.யின் முடிவு என்பதால் அதன் விளைவுகளையும் அவன்தான் எதிர்கொள்ள வேண்டும். தள்ளிநின்று வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர நீங்கள் இதில் என்னதான் செய்ய முடியும்?

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...