ஞானத்தின் சரியான பாதை
உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு போதும்
என்ற மனநிலைதான் ஞானம்.
எதற்கும் எதுவும் முடிவு இல்லை எனும் போது
தொடர்ந்து சென்று கொண்டிருப்பீர்கள். உங்களை நிறுத்த முடியாது. ஞானவான்களின் பொதுவான
குணம் அது.
வரும் என்ற நம்பிக்கையில் இருப்பதோ, கிடைக்கும்
என்று நம்பிக்கையில் செயல்படுவதோ அங்கில்லை. கிடைப்பது மற்றும் கிடைக்காதது என்ற இரட்டை
நிலை அங்கு ஏது?
மலர்கின்ற பூக்களைப் போல் மலராத மொட்டுகளும்
அங்கு சமமாகவே பூஜிக்கப்படுகின்றன. பெரும்பாலான மன வருத்தங்களும், மனக்கோணல்களும்
சமனின்மையால் நிகழ்கின்றன.
பொதுவாகக் கோபப்படாதீர்கள். ஞானம் அர்த்தமிழந்து
விடும். சமனற்ற சாலையில் வாகனங்கள் விழாமல் செல்வது அரிது. கோபம் உங்கள் உடலைத்தான்
பாதிக்கிறது. நீங்கள் எதிரிகளாக நினைப்பவர்களைப் புன்னகைக்கச் செய்கிறது.
ஆசைப்படுபவைகளை எல்லாம் செய்ய முற்படாமல்
ஆர்வம் இருந்தால் மட்டும் செய்யுங்கள். இல்லையா தாட்சண்யம் பார்க்காமல் விட்டு விடுங்கள்.
என்னவென்று புரியாமல் எதையும் செய்யாதீர்கள்.
விளைவு என்னவாகப் போகிறது என்பதை யோசிக்காமல் ஆசைக்காக, கவர்ச்சிக்காக செய்வதை விட்டு
விடுங்கள். அனைத்துப் பிரச்சனைகளும் அந்தப் புள்ளியில் இருந்துதான் முளை விடுகின்றன.
பலன் கருதிச் செய்வதும், பின்விளைவை யோசித்துச்
செய்வதும் ஒன்று என்று புரிந்து கொள்ளாதீர்கள். இரண்டும் ஒன்றல்ல. பின்விளைவை யோசிக்கும்
அளவுக்கு அறிவில்லாத ஞானம் ஞானமாகாது. ஞானம் என்பது பூரணத்துவமான அறிவு.
*****
No comments:
Post a Comment