7 Aug 2017

கொஞ்சம் மகிழ்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள்!

கொஞ்சம் மகிழ்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள்!
            மனம் எதிர்பார்ப்புகளின் கூடை. நிரம்பி வழியும் கூடை. நிறைவேறவில்லை என்ற எண்ணங்களால் கிழிந்து கொண்டிருக்கும் கூடையும் கூட.
            நிறைவேறுவதை விட நிறைவேறாமல் இருப்பது நல்லது. மனதைத் திரும்பிப் பார்க்கும் இடம் அங்குதான் தொடங்குகிறது.
            திரும்பிப் பாருங்கள். மனதின் எந்தப் பக்கம் சூழினும் எதிர்மறை உணர்வுகள். எதிர்மறை உணர்வுகள் என்பது என்ன? தனக்குத் தானே ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டு, அது நடக்காது என்று தனக்குத் தானே ஓர் உணர்வை உருவாக்கிக் கொள்வதுதான். இதன் அடிப்படை ஓர் எதிர்மறை உணர்வுதான்.
            ஏன் மனம் ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொள்கிறது? மனம் இயல்பில் மகிழ்ச்சியாக, அங்கீகாரத்தோடு இல்லை. அதன் மூலம் ஒரு மகிழ்ச்சி, ஓர் அங்கீகாரத்தை பெற விரும்புகிறது.
            மனம் இயல்பில் மகிழ்ச்சியாக இல்லையா? இயல்பில் அங்கீகாரம் பெற்றத் தன்மையோடு இல்லையா? ஆம் அது அப்படித்தான் இருக்கிறது. அதுதான் அப்படி ஒரு பரபரப்பை உருவாக்குகிறது. எதாவது செய் என்று முடுக்கி விடுகிறது. குறைந்தபட்சம் கண்ணில் படும் ஒரு பொருளைத் தூக்கிப் போட்டாவது உடை என்கிறது.
            நிலைமை அப்படியானால் இயல்பான மகிழ்ச்சி என்பது என்னவென்று உணர வேண்டும். அது நுட்பமானது. சாதுர்யமானது. அதில் ஆச்சர்யப்பட்டுக் கண்டறிவதற்கோ, வியப்பை வெளிப்படுத்துவதற்கோ எதுவுமில்லை. நீங்கள் அதை அடையலாம். அதை வெளிப்படுத்தும் கணத்தில் நீங்கள் ஒரு தவறு செய்கிறீர்கள். இயல்பை மீறுகிறீர்கள். அதை வெளிப்படுத்துவதன் மூலம் ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களுக்குப் புரியவில்லை என்றால் மீண்டும் முதலிலிருந்துப் படியுங்கள்.

*****

No comments:

Post a Comment