7 Aug 2017

ஒருவர் பொறை ஒருவர் மனஇறுக்கம்

ஒருவர் பொறை ஒருவர் மனஇறுக்கம்
            சில தவறான விசயங்களை எம்.கே. செய்தான். எஸ்.கே.வின் வீட்டிற்குச் சென்றது அதில் முதன்மையானது. வழக்கமாக எஸ்.கே.யின் பேச்சுகள் மனஇறுக்கத்தை அதிகரிக்கும். அதுவும் எம்.கே. மனஇறுக்கமாக இருந்த நேரத்தில் சென்றதும், அதுவும் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் சென்றதும் எம்.கே.வின் மனஇறுக்கத்தை அதிகரித்து விட்டன. இது என்ன முட்டாள்தனம் என்று எம்.கே. தெளிவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டன.
            எம்.கே.வின் மனஇறுக்கம் அவ்வபோது அதிகரிபபதற்கு எஸ்.கே.யும் ஒரு காரணம். நடந்த விசயங்கள் அநேகமாக மோசமானவை.
            இதை வேறு வழிகளில்தான் எம்.கே. சரி செய்தாக வேண்டும். அவன் அளவுக்கதிகமாக நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கிறான். மண்டையைக் குழப்பும் கவிதைகளைப் படித்துக் கொண்டு இருக்கிறான். டாஸ்மாக்கைப் பார்த்தால் நின்று மரியாதை செய்து புட்டிகளாய் வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டு இருக்கிறான்.
            எல்லாவற்றிற்கும் மேலாக மனதின் பேராசையைக் குறைக்க வேண்டும் என்றும் இதுபோன்ற நேரங்களில் சாதாரணமாகக் கூட ஆசைப்படக் கூடாது என்று எம்.கே. மனதைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறான்.
            இனி எம்.கே. தன் விருப்பங்களை எஸ்.கே. மேல் சுமத்தக் கூடாது என்று முடிவு செய்து விட்டான். அவரவர் விருப்பங்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத திராணியற்ற பலர் வாழும் உலகில் எம்.கே.வின் விருப்பத்தை நிறைவேற்று என்றால் யார் நிறைவேற்றுவார்கள்? ஏதோ அவர்கள் அப்படியே வாழ்ந்து விட்டு அப்படியே போகட்டும் என்று விட்டு விடு என்று எம்.கே. தன் மனதிற்குப் போதித்து விட்டு, மெளனமாய் காட்டுக் கூச்சல் போட்ட எஸ்.கே.வைக் கடந்து சென்றான்.

*****

No comments:

Post a Comment