14 Jul 2017

கொஞ்சம் உளவியல்! கொஞ்சம் களவியல்! - by எஸ்.கே.


கொஞ்சம் உளவியல்! கொஞ்சம் களவியல்! - by எஸ்.கே.
            இந்த உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு தினுசுதான். அவர்கள் அப்படித்தான். நாய் வாலை நிமிர்த்த முயல்வதும், அவர்களைத் திருத்த முயல்வதும் ஒன்றுதான்.
            அவர்கள் அப்படி இருப்பதற்கு அவர்களின் மனோபாவம் காரணமாக இருக்கிறது. யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தங்கள் மனோபாவத்தை விட்டுக் கொடுக்க தயாராக இருக்க மாட்டார்கள்.
            அண்மையில் நான் மனஇறுக்கத்துக்கு ஆட்பட்டது என்றால் என் மனச்சுருக்கத்தால் நிகழ்ந்ததுதான். எப்போதும் மனஇறுக்கம் மனம் சுருங்குவதால் ஏற்படுகிறது. பரந்த, விரிந்த மனதில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. அது சரிதான் போ என்று விட்டுக் கொடுத்துப் போய் விடும்.
            இப்போது யோசித்துப் பார்க்கையில், எதற்கும் நான் தீர்வு சொல்லியிருக்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால் எந்தத் தீர்வும் அப்படி ஒன்றும் சிறந்த தீர்வாக எனக்குத் தோன்றவில்லை. வேண்டுமானால் ஆறுதல் சொல்லி அத்தோடு விட்டு இருக்கலாம். மனிதர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.
            யாரும் யாரிடமிருந்தும் வழிமுறைகளை எதிர்பார்ப்பதில்லை. அது அவரவர்களுக்கேத் தெரியும். ஏதோ அந்த நேரத்து ஆறுதல் என்று அத்தோடு முடிந்து போயிருக்க வேண்டிய விசயம், என் வாழ்வில் மனஇறுக்கமாக தொடர ஆரம்பித்தது. இதெல்லாம் நானே வழிகாட்டுகிறேன் என்று ஆரம்பித்த போது நடந்தது.
            இப்போது புரிகிறதா? நான் ஏன் அறிவுரைகள் சொல்வதில்லை என்று. என்னிடம் அறிவுரை கேட்பவர்கள் தயவு செய்து நான் மேலே சொன்ன விசயங்களைப் பரிசீலியுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
            அறிவுரைகள் ரொம்ப மோசமானது. கொஞ்சம் சூதனமாக இல்லா விட்டால் கொடுப்பவன் கையைப் பதம் பார்த்து விடும்.
*****

No comments:

Post a Comment