தமிழ்ப் புலவர்கள் வரலாறு
அந்தக் காலத்தில் ராஜாக்கள் இருந்தார்கள்.
புலவர்கள் பாடித் தள்ளினார்கள். குறுநில மன்னர்கள், இனக்குழுத் தலைவர்களை நம்பி பாடல்
பண்ணி பரிசில் பெற்று குடும்பம் நடத்தியவர்கள் கதை இலக்கியத்தில் நிறைய.
ஒளவைப் பாட்டியெல்லாம் அதியமானுடன் சரிக்கு
சரியாக அமர்ந்து கள்ளே குடித்திருக்கிறார். மோசீகீரனார் என்ற புலவர் அரசக் கட்டிலிலே
தூக்கம் போட்டிருக்கிறார்.
சடையப்ப வள்ளல் இல்லாவிட்டால் கம்ப ராமாயாணம்
நூறு பாடல்களில் முடிந்திருக்கும். பிற்காலத்தில் ஜமீன் வகையறாக்கள், நிலக்கிழார்களை
நம்பி சிற்றிலக்கியங்கள் படைத்தார்கள். விறலி விடு தூது படித்தீர்கள் என்றால் அவ்வளவு
ரசமாக கிளுகிளு சமாச்சாரங்களாய் இருக்கும்.
மடங்கள் இருந்த காலத்தில் தலபுராணங்கள்
பாடிப் பிழைப்பு நடந்தது. பதிப்பகங்கள் வந்தக் காலத்தில் புத்தகங்கள் போட்டு வண்டி
ஓடியது. இப்போது நிலைமை ரொம்ப சிரமம். புத்தகங்கள் போட பதிப்பகங்கள் எழுதுபவர்களிடம்
காசு கேட்கின்றன. புத்தகம் போட்டு பத்து விற்பதற்குள் பித்து பிடித்து விடுகிறது.
எழுத்தாளர்கள் பிழைக்க வழி லேது. சினிமாவில்
புகுந்தவர்கள் தப்பித்தார்கள். எல்லார்க்கும் சினிமாவில் இடமில்லை. சினிமாதான் இப்போது
சோறு போட்டுக் கொண்டிருக்கிறது. குத்துப்பாட்டு எழுதினால் காசு கொட்டும்.
சோற்றுக்கு வழியுள்ளவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
பசையுள்ள பார்ட்டிகளை எகனை மொகனையில் எழுதியும் சமயங்களில் கடன்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
பத்திரிகைகளுக்கு எழுதினால் எப்போதாவது
வெளிவருகிறது. ஐம்பது நூறு அனுப்புவார்கள். ஒவ்வொரு பத்திரிகைக்கும் தகுந்த மாதிரி
எழுத வேண்டும். இல்லையென்றால் பிரசுரமாகாது. ஐம்பதும் நூறும் கிடைக்காது.
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். புத்தகம்
போட பயமாக இருக்கிறது. ப்ளாக்கில் எழுதுவதால் தப்பித்தேன். இந்தியாவில் யாரும் படிக்க
மாட்டேன்கிறார்கள். அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், ஜெர்மனியிலும்தான் படிக்கிறார்கள்.
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் படிக்க
ஆளிருக்கிறார்கள். அவர்களாவது நான் எழுதுவது குறித்து கேவலமாவது எதாவது ரெண்டு வார்த்தைகள்
எழுதுவார்கள் என்று பார்த்தால், ம்ஹூம்! எழுதுவது ஆபத்து என்பதைப் புரிந்து கொண்டவர்கள்
அவர்கள்.
*****
No comments:
Post a Comment