11 Jul 2017

வைரமுத்துவின் 'தமிழைத் துறக்காத துறவி' கட்டுரையை முன் வைத்து ...


வைரமுத்துவின் 'தமிழைத் துறக்காத துறவி' கட்டுரையை முன் வைத்து ...
            "சிலப்பதிகாரம் என்ற கலைக்காப்பியம் மெய்யா? புனைவா? மெய்யுறு புனைவா? எவ்வாறாயினும் ஆகுக."
            என்று சிலப்பதிகாரத்தை நட்டாற்றில் விட்டு கட்டுரைக்கத் தொடங்குகிறார் கவிப்பேரரசு வைரமுத்து. ஒரு நல்ல கட்டுரை என்பது சரியான வினாக்களை எழுப்பி சரியான விடைகளைத் தர வேண்டும். அக்காப்பியம் எவ்வாறாயினும் ஆகுக என்ற தொடக்கமே, ஒரு புரட்சிகரமான முயற்சி என்று கொள்ளலாம் என்றால் அவரது கூற்று ஏற்கத்தக்கதே.
            இளங்கோவடிகளின் காலக் கட்டம் குறித்த ஐயப்பாட்டை முன் வைத்து அது இரண்டாம் நூற்றாண்டா? எட்டாம் நூற்றாண்டா? ஒரு குழப்பத்தையும் முன்வைக்கிறார் வைரமுத்து. அக்காலக்குழப்பமும் எக்காலமாயினும் ஆகுக என்கிறார். இது வைரமுத்துவின் காலம். அவர் சொன்னால் எதுவும் எடுபடும் என்பதால் வேறு வழியில்லை. ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
            சிலப்பதிகாரம் முக்காண்டங்களைக் கொண்ட முத்தமிழ் காப்பியம் என்பது உறுதியாக ஏற்கப்பட்ட நிலையில் வஞ்சிக் காண்டத்தை இடைச்செருகல் என்பது போன்ற ஐயத்தையும் முன் வைக்கிறார்.
            இயற்கை கடந்த நிகழ்வுகள் ஆரியக் கலப்பின் நீட்சியா? என்ற கேள்வியை முன் வைத்து அதுவும் எவ்வண்ணமாயனும் ஆகுக என்கிறார்.
            இவைகள் எல்லாம் கட்டுரையாற்றுவதற்கு முன் தான் நிறைய நூல்களைப் பயின்றதைக் காட்டுவதற்காக வைரமுத்து எடுத்து வைப்பன என்றால் அது ஏற்கதக்கதாகவே ஆகுக.
            சிலப்பதிகாரம் ஆரிய கலப்பின் நீட்சியா என்ற ஐயப்பாட்டை முன் வைக்கும் அவரே சிலப்பதிகாரம் இல்லையாயின் திராவிடப் பெருஞ்சமுதாயத்தின் பெருமை கூறும் தொல்லெச்சங்கள் இல்லை என்று அடுத்து வரும் பத்திகளில் முரண்படுவது கவனிக்கத்தக்கது.
            காப்பிய கருப்பொருள் சிறியதுதான் என்று சிலப்பதிகாரக் கருப்பொருளைப் பற்றி வைரமுத்து ஒரு பத்திக்குள் கதையை அடக்குகிறார். எந்தக் காப்பியப் பெருங்கதையையும் அப்படி ஒரு பத்திக்குள் அடக்க முடியும் என்பதை வைரமுத்து அறியாதவர் அல்லர். மேலும் வைரமுத்து சொல்லும் பத்தியும் காப்பியக் கருப்பொருளும் அன்று. அவர் சுருக்கமான கதையைச் சொல்கிறார். காப்பியக் கருப்பொருள் என்ன என்பதை சிலப்பதிகாரமே தெளிவுபடுத்தும். அது அரைசியல் பிழைத்தோர்க்கும் அறம் கூற்றாவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற அனைவரும் அறிந்த கருப்பொருளே ஆகும்.
            கோவலன் மாதவி இல்லம் புகுந்ததற்கு இரண்டு காரணங்களை முன் வைக்கிறார் வைரமுத்து.
            1. காமம் ஒரு காரணம்,
            2. கலை முதற் காரணம்.
                        சிலப்பதிகாரக் கதையை அறியாதவர் அல்லர் வைரமுத்து. அவர் சொல்லும் காரணம் சிலப்பதிகார கதைக்கு முரண்பட்டது. இளங்கோவடிகள் இது குறித்து எந்தக் காரணத்தையும் முன் வைக்கவில்லை. நகர நம்பியர் திரியும் தெருவில் மாதவியின் தாயால் அனுப்பப்பட்ட கூனி கூவி விற்கும் பசும்பொன் மாலையை 1008 கழஞ்சுக்கு வாங்கிக் கொண்டு மாதவியின் மனை புகுகிறான் கோவலன். அக்கால வணிகர் குல நகர நம்பியர்களிடம் திகழ்ந்த ஒரு வழக்கத்தைத்தான் இளங்கோவடிகள் காட்டுகிறார். வைரமுத்துக் கூறும் காரணம் வலிந்து திணிக்கும் ஒன்று. பின் சிலப்பதிகாரத்தின் ஓரிடத்தில், இது குறித்து கோவலன் கண்ணகியிடம் "சிறுமுது குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்" என்ற வரிகள்  மூலம் இதைப் புலப்படுத்துவார் இளங்கோவடிகள். அன்றைய காலக்கட்டத்தில் மருதத் திணையின் உரிப்பொருளாகவே இத்தன்மையைப் புலவர்கள் கையாள்கின்றனர் என்ற பொருளில் உற்று நோக்கும் போது இளங்கோவடிகள் கையாண்டுள்ள மரபுத்தொடர்ச்சி புனலாகும். இந்திர விழாவில் இப்படிப்பட்டச் சம்பவங்கள் நிகழ்வது அதிகம் என்பதை மணிமேகலையும் காட்டும். மணிமேகலையில் மணிமேகலையின் பின்னால் உதயகுமாரன் சுற்றித் திரிவது  ஒரு சான்று. கலைத்துறையில் இருக்கும் பெண்டிர் குடும்ப வாழ்வில் சந்திக்கும் அவலநிலை அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது என்பதற்கு மாதவியின் அவல வாழ்வு ஒரு சாட்சியாகிறது சிலப்பதிகாரத்தில். இதை காமம் என்றும், கலை என்றும் மூடி மறைப்பது கலை என்ற பெயரால் ஆணாதிக்க சமூகம் பெண்களை ஆட விட்டு ரசித்து வந்த தன்மையை மறைப்பது போலாகி விடும். இன்றும் கூட இந்த மரபு திரைப்படம் வரையில் குத்தாட்ட நடனமாக பெண்களின் கவர்ச்சியை மையப்படுத்தியே தொடர்கிறது.
            "மாதவியின் மீது கோவலன் கொண்ட மையலுக்குப் புறக்காரணம் கலை, அகக்காரணம் கற்பு என்றே அறிய முடிகிறது. ஏனென்றால் மாதவியின் முதலீடு பாலியலுக்கானதன்று, பைங்கலைக்கானது" என்ற முடிபைத் தருகிறார் வைரமுத்து. இதன் மூலம் கோவலனைத் தூய்மைபடுத்த முயல்கிறார். ஆணாதிக்கச் சிந்தனையையும் வளர்க்க முயல்கிறார்.
            மாதவியின் முதலீடு பைங்கலைக்கானது என்கிறார் வைரமுத்து. சமூகம் தன் மீது திணிக்கப்பட்ட ஒரு வாழ்வை வாழ்கிறாள் மாதவி. ஆடல்கலை அரசியான அவள் தன் முதலீட்டைத் தொடர விரும்பாமல் பெளத்த சந்நியாசியாகவே முயல்கிறாள். அவளது கலை அவளை ஒரு நுகர்பொருளாகப் பார்ப்பதை அவள் உணர்கிறாள். தன் மகளும் அப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்ந்து விடக் கூடாது என்பதில் அவள் கண்ணும் கருத்துமாக இருக்கிறாள். மக்கள் சமூகத்துக்குப் பயன்படும் ஒரு வாழ்வையே அவள் விரும்புகிறாள். கலைகள் செழித்த தமிழகத்தில் நிலவிய பஞ்சம், பட்டினியைப் போக்கிட அவள் தன் மகளை அர்ப்பணிக்கவும் துணிகிறாள். மேலும் தன் மகளை தன் மகளாகக் குறிப்பிட விரும்பாது, கண்ணகியின் மகளாகவே குறிப்பிடவும் விரும்புகிறாள். பெண் கலைஞர்களின் வாழ்க்கையின் இழிநிலையைக் காட்டுவது அவளது வாழ்வு. இதை நுட்பமாகப் பதிவு செய்ய மறுக்கிறார் வைரமுத்து. பண்பாட்டு விழுமங்கள் என்ற பெயரில் சமூக அங்கீகாரம் இல்லாத மாதவியின் வாழ்வை கலை வாழ்வாகக் காட்ட முயல்கிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் மூலம் காட்டுவது பெண்கள் வாழ்க்கையில் ஆண்கள் புகுந்து விளையாடிய ஆதிக்க வாழ்வைக் காட்டும் வரலாறாகும். அவர்கள் ஆண்கள் இழுத்தப் பிடிக்கு எல்லாம் அலைகின்றனர். கண்ணகியைக் காரணமின்றி பிரிகிறான் கோவலன், மாதவியை ஊடல் கொண்டு பிரிகிறான். தான் எந்தப் பெண்ணோடு வாழ வேண்டும் என்ற முடிவையும் அவனே எடுக்கிறான். கண்ணகியும், மாதவியும் அவன் முடிவுக்கே கட்டுப்பட வேண்டியிருக்கிறது.
            சோம குண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கி, காமவேள் கோட்டம் தொழ தேவந்தி அழைக்கும் போது கண்ணகி கூறும் "பீடன்று" என்பதற்கு வைரமுத்து கூறும் காரணம் அவர் கவிதை நெஞ்சைக் காட்டுகிறது. கணவனே கண்கண்ட தெய்வமாகக் கருதி, பிற தெய்வங்களை வழிபடா அன்றைய பெண்டிரின் நிலையைக் காட்டுவதாக இதைக் கொள்வதில் பிழையில்லை. கோவலன் மேல் கண்ணகி கொண்ட அன்பும், ஒரு நாள் நிச்சயம் கணவன் தன்னிடம் மீள்வான் என்ற நம்பிக்கையும் கொண்ட பெண்ணாக அவள் பரிமளிப்பதையும் காட்டும் இடம் இது. கண்ணகி போல இருக்காதீர்கள் என்று இந்த இடத்தைச் சுட்டி முன்பு வைரமுத்து எழுதிய கவிதையும் இவ்விடத்தில் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியிவில்லை.
            மாதவி கோவலனுக்கு எழுதிய காதல் கடிதம் குறித்து பண்பாட்டு மொழி என வைரமுத்து பேசுகிறார். மாதவியின் எந்தக் கடிதத்துக்கும் பதிலைத் தராத கோவலனின் தன்மை குறித்து பேச மறுக்கிறார். தன் மனம் போன போக்கிலே, ஆண் என்கிற தன்மையினால் முடிவெடுத்து வாழும் அவனது தன்மையை கேள்விக்கு உள்ளாக்க மறுக்கிறார். மாதவி அனுப்பிய கடிதத்துக்குப் பதில் அனுப்பாத கோவலனின் பண்பு எத்தகைய பண்பாட்டு மொழியோ? சிலப்பதிகாரத்தில் கோவலனை நம்பி ஒரு காலத்தில் கண்ணகி கலங்கித் தவித்தால், இன்னொரு காலத்தில் அவன் பிரிவால் மாதவி குழம்பித் தவிக்கிறாள்.
            கண்ணகி மதுரையை எரித்தது நியாயமா? எனும் கேள்விக்கு விடை தேடும் வைரமுத்து தீயவர்களை அழிப்பதற்கான வழியாக அதைக் குறிப்பிடுகிறார். வைரமுத்து தடுமாறும் இடம் இதுதான். இளங்கோவடிகள் புரட்சிக் கவி. தனது வாழ்விலே சோதிடத்தைக் கடாசி எறிந்த முற்போக்காளர். கணவன் இறப்பிற்குப் பெண்கள் தீக்குளிக்கும் வழக்கத்தை தன் காப்பியத்தின் மூலம் முறியடிக்கும் தன்மையைப் படைப்பதற்காகவே இளங்கோவடிகள் காப்பியத்தின் முடிவை கண்ணகி தான் தீயில் விழாமல் கணவனின் சாவுக்குக் காரணமானவர்களைத் தீயில் வீழ்த்துவதாகக் காட்டுகிறார். ஒவ்வொரு காப்பியமும் தன் காலத்துச் சூழ்நிலைக்கு ஏற்ப முற்போக்கான கருத்தைக் கொண்டிருக்கும். அப்படிச்  சிலம்பு கொண்டிருக்கும் முற்போக்கு இடம் இது.
            கண்ணகி முலையைத் திருகி எறிந்த இடத்திற்கு அவர் குறிப்பிடும் பிற இலக்கிய சான்றுகள் ஒவ்வாத தன்மையோடு விளங்குகிறது. தன் அன்பிற்குரியவனை இழக்கும் போது மனித மனம் தன்னைத் தானே சிதைத்துக் கொள்வதும், தன் உடல் உறுப்புகளைச் சிதைத்துக் கொள்வதும் துயரத்தின் உச்சத்தால் நிகழக் கூடியதே. தலைவர்கள் இறக்கும் போது அன்புத் தொண்டர்கள் தீக்குளிப்பதும், தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொண்டு கட்டை விரல்களையும் வெட்டிக் கொள்வதும் போன்றதான நிகழ்வு இது. தன் அன்பிற்குரியவனின் சாவுக்கு நீதி கேட்ட கண்ணகி, அதன் பின்னும் ஆற்ற முடியாமல் தன் முலையைப் பிய்த்து எறியும் அளவுக்கு மனரீதியான தாங்கொணா துயரத்தை அடைகிறாள். அவள் அன்பின் வழியதான துயரத்தின் வெளிப்பாடு அது. மிகவும் பயங்கரமான துயரத்தின் வெளிப்பாடும் அது.
            வஞ்சிக் காண்டம் இடைச்செருகலோ? என்ற ஐயப்பாட்டைத் தொடக்கத்தில் எடுத்துக் கொண்ட வைரமுத்து அதில் உள்ள செங்குட்டுவனின் வெற்றியைக் கொண்டு தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு செய்தியைத் தருகிறார். ஒற்றுமையாக முயன்றால் உலகமயமாக்கல் எனும் போரில் நாமே வெல்வோம் என்று. உலகமயமாக்கல் என்பது ஒரு போராகக் கருதத்தக்கதன்று. அது ஒரு வணிக சூழ்ச்சி. அதற்கு எதிராக ஒரு போரைத் தொடங்கினால் அதிலும் ஆயுதம் விற்று காசு பார்ப்பதுதான் உலகமயமாக்கல்.
            சோழ, பாண்டியர் சேரனின் வடபுல வெற்றியை மதிக்காததையும், அதனால் சேரனாகிய செங்குட்டுவன் சினந்ததையும் அடிகள் இக்காப்பியத்தில் பதிவு செய்துள்ளார். தன்னை தமிழ் அரசனாகக் கருதிக் கொண்ட செங்குட்டுவன் சோழர்களையும், பாண்டியர்களையும் இணைத்து படை நடத்தியிருக்க வேண்டும். ஆகவே சேர, சோழ, பாண்டியர்கள் பிரிந்தே இருந்திருக்கிறார்கள். ஒருவர் வெற்றியில் மற்றவர்கள் பொறாமை கொண்டிருக்கிறார்கள். அவரவர் திறமைக்கு ஏற்பவும், படை நடத்தும் வலிமைக்கு ஏற்பவும் வடபுலத்து வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். தமிழரசர்கள் என்றும் ஒன்றிணைந்து அவ்வெற்றியைப் பெறவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதை மாற்றும் முயற்சியாகத்தான் அடிகள் இவ்விலக்கியத்தையே படைக்கிறார் என்று முக்கிய செய்தியை வைரமுத்து வேண்டுமென்றே தவற விட்டிருக்க மாட்டார். வைரமுத்து உருவாக்க நினைக்கும் தமிழுணர்ச்சி குறுகியக் கண்ணோட்டம் உடையது. அதைப் பின்வரும் கூற்றுகளால் புரிந்து கொள்ளலாம்.
            இந்நாள் தமிழர் வருணாசிரமம் கடக்க வேண்டும் என்கிறார். தந்தைப் பெரியார்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
            மதங்கள், கட்சிகள் என்ற மாச்சரியம் மடிய வேண்டும் என்கிறார். அவரவர்களுக்கனெ ஓர் அடையாளமாக பன்முகத் தன்மையோடு விளங்க வேண்டிய சனநாயகத் தன்மையை மாச்சரியம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
            முதலியார் - கவுண்டர் - நாடார் - தேவர் - பிள்ளை - நாயக்கர் என்ற சாதி பேதம் அழிய வேண்டும் என்று அதில் கூட மிக கவனமாக மிகவும் பிற்பட்டவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியின சாதிகளைப் பேசாமல் கவனமாகத் தவிர்க்கிறார்.
            எப்போதும் தமிழுணர்ச்சி என்பது மலிவான கடைச் சரக்காக இருக்கிறது. அதை வைரமுத்துவும் பயன்படுத்துகிறார். வைரமுத்து போன்ற பிரபலமான தமிழ் ஆளுமைகள் இன்னும் கூர்மையாக ஆய்வு செய்து இலக்கியத்தை அதன் நியாயமான தன்மையோடு நடுநிலை தவறாது மக்கள் மன்றத்தில் முன் வைக்க வேண்டும். அந்த நேரத்து உணர்ச்சியைத் தூண்டும் வகையில் முன் வைப்பது ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பது போலாகி விடும். கவிதைக்கு ஒத்து வரும் இந்த ஆற்றல் மிக்க உணர்ச்சி, கட்டுரைக்கு எந்த அளவுக்குப் பொருந்தும் என்பதை வைரமுத்துதான் கூற வேண்டும். அதுவும் ஒட்டுமொத்த கட்டுரைக்கும் தன்மையையும் அந்த ஒரு தளத்திலேயே கொண்டு செல்வது எந்த அளவுக்குப் பொருந்தும் என்பதையும் அவர்தான் கூற வேண்டும்.
*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...