எஸ். கே. விடுக்கும் வேண்டுகோள்
நண்பர் ஒருவர் இரண்டாயிரம் சதுர அடியில்
ஒரு வீடு கட்டியிருந்தார். அதில் எஸ்.கே. ஆகிய எனக்கு வழங்கப்பட்ட பெருமை புதுமனை புகுவிழாவின்
போது கவிதை வாசிக்க அனுமதிக்கப்பட்டதுதான்.
இல்லமே, வெல்லமே, உள்ளமே என்று விரியும்
அந்தக் கவிதையின் கைப்பிரதியினை எப்படியோ அசட்டையாகத் தொலைத்து விட்டேன். தமிழ் கவிதையுலகுக்கு
அது ஓர் இழப்புதான். பல நேரங்களில் அந்தக் கவிதையை நினைவுபடுத்திப் பார்க்கிறேன். வருவேனா
என்கிறது!
இப்போது விசயத்திற்கு வருகிறேன். இரண்டாயிரம்
சதுர அடியில் கட்டப்பட்ட வீட்டில் நண்பர் பெண்டு, பிள்ளைகளோடு நன்றாக வாழ்ந்து வந்தார்.
பிள்ளைகள் யு.எஸ்ஸூக்குப் போன பின் மனைவியோடு சிறிது காலம் இருந்து பார்த்து விட்டு,
முதியோர் இல்லம் பெஸ்ட் என்று போய் விட்டார்.
வீடு காலி. அவர் என்ன நினைத்தாரோ, வீட்டைப்
பூட்டி சாவியை என்னிடம் கொடுத்து விட்டார். எமக்கு தன்மானம் அதிகம் என்பதால் அங்கு
குடியேற விருப்பமில்லை. மாதத்திற்கு ஒரு முறை இலக்கியக் கூட்டம் மட்டும் அந்த வீட்டில்
நடத்துவதுண்டு. இரண்டு மூன்று பேர் வருவதுண்டு.
இரண்டு மூன்று பேர்தானா என்று புருவத்தை
உயர்த்தாதீர்கள். நான் என்ன செய்வது? அந்த வீட்டின் ராசி அப்படி.
நீங்கள் வருவதாகச் சொன்னால் அட்ரஸ் தருகிறேன்.
மற்றபடி அந்த வீட்டில் இரவில் பேய்கள் உலவுவதாக சொல்லும் சங்கதிகளை மட்டும் நம்பி
விட வேண்டாம். அத்தனையும் கட்டுக்கதைகள். உண்மையானக் கதைகள் எழுதும் நான் சொல்வதில்
நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
(வேண்டுகோள்கள்
அவ்வபோது விட்டு விட்டு வளரும்...)
*****
No comments:
Post a Comment