6 Jul 2017

மாட்டிறைச்சிக்குப் பலி மனித இறைச்சியா?


மாட்டிறைச்சிக்குப் பலி மனித இறைச்சியா?
            "அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
            உயிர்செகுத்து உண்ணாமை நன்று"        - குறள் எண் 259
                        என்ற குறட்பா வள்ளுவர் காலத்திலும், அவர் காலத்துக்கு முன்பும் நடத்தப்பட்ட வேள்விகள் குறித்தும், வேள்வியில் சொரியப்பட்ட அவிப்பலி குறித்தும் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர் ஆண்டு என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கணிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேள்விப் பலிகள் இருந்ததற்கான சாட்சியம் அக்குறள்.
            இக்குறளோடு, வேதகாலத்தில் நடைபெற்ற வாஜபேய, அசுவமேத வேள்விகளில் பசுக்கள் பலி இடப்பட்ட வரலாற்றுச் செய்தியையும் ஒப்பு நோக்கினால் அவ்வேள்விகளில் ஆடு, மாடு முதலியன பலியிடப்பட்டு சொரியப்பட்டிருக்கக் கூடும்.
            தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் பசுக்கள் பலியிடப்படுவது மிக வெளிப்படையாகப் பதிவாகியுள்ளது. பசுப்பலிக்கு எதிராக ஆபுத்திரன் கதை மணிமேகலையில் படைக்கப்பட்டுள்ளது.
            பசுப்பலி மட்டுமல்லாது உயிர்ப்பலியையும் முழு முதலாக எதிர்க்கும் சிந்தாந்த வலு சமணம், பெளத்தம் போன்ற மதங்களுக்கே உரியது.  பசுக்களை வேள்வித் தீயில் வெட்டிப் பலியிட்ட இந்து மதத்துக்கு அது கிடையாது. (இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பெளத்ததுக்கு அது உண்டா என்பது விவாதத்திற்குரியது.)
            இந்துத்துவா போல் பசுப்பலி செய்து விட்டு, மாட்டிறைச்சியையும் தின்று விட்டு தற்போது பசுக் காவல் எனும் புனிதம் பேசும் மதங்களாக சமணமோ, பெளத்தமோ(!) இல்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
            தமிழ் மரபிலும் மாட்டிறைச்சி உண்டதற்கான குறிப்புகள் நிறையவே உண்டு. சான்றாக, சிறுபாணாற்றுப்படையில்
            "ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்" என்ற வரிகளில் வேலூரில் சிறுபாணர்கள் பெறும் விருந்தாக ஆமான் இறைச்சி சுட்டப்படுகிறது. ஆமான் என்பது காட்டுப்பசு ஆகும்.
            இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதா என்று கேள்வி கேட்பவர்களிடம், மாட்டிறைச்சிக்காக மனிதர்களைக் கொல்வதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மாட்டிறைச்சிக்காக மனித இறைச்சியைப் புனிதத்துவத்தின் பெயரில் பலியிடக் கூடிய நிலையை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
            "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
            எல்லா உயிரும் தொழும்"                        - (குறள் எண் 260)
                        மாட்டிறைச்சி எனும் ஒரு புலாலை மட்டும் மறுத்து, ஆடு, கோழி, பன்றி, மீன் போன்ற புலாலை உண்டு கொண்டு,
            மாட்டிறைச்சி எனும் ஒரு புலாலை மறுத்து, மனித உயிர்களைக் கொன்று கொண்டு, பேசப்படும் மாட்டிறைச்சித் தடை புனிதத்துவத்தின் பேரால் மனிதகுலத்தின் மேல் நிகழ்த்தப்படும் வன்கொடுமைப் போராகும்.
            புலாலை மறுப்பவன் கொல்லாமையும் கைக்கொள்ள வேண்டும். அதாவது மாட்டி‍றைச்சி புலாலை மறுப்பவன் மனித உயிர்களைக் கொல்லாமையையும் கைக்கொள்ள வேண்டும். மாட்டிறைச்சிக்காக மனித உயிர்களைக் கொன்றால், கூப்பிய கைகளை மாரிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு பாரதத்தாய் பெற்றெடுத்த இந்திய உயிர்கள் எல்லாம் அழும் என்பதை சட்டங்களை வகுப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே!

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே! இருக்கின்ற வேலைகளை தனியார் ஒப்பந்த வேலைகளை விடுவதற்கு நிரந்தரப் பணிகளைத் தற்காலிகப் பணிகளாக ...