கவிதை ஆவதும், முட்டாள்தனம் ஆகாததும்!
- இசைக்கு மறுப்பு.
"மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன்'
என்ற கட்டுரையை ஆ.இரா.வேங்கடாசலபதியின் 'எழுக, நீ புலவன்!' நூலை முன் வைத்து இசை என்பார்
'விகடன் தடம்' ஜூலை இதழில் (பக்கம் 72) எழுதியுள்ளார்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" (குறள் எண் 948)
என்கிற அறிவு கவிதை ஆவதில்லை
என்கிறார் இசை. மேலும் இப்பாடலை வேறு வேறு விசயங்களுக்கும் பொருத்திப் பார்த்து நாம்
பெருமிதம் கொள்ளலாமே ஒழிய, இப்பாடல் ஒருக்காலும் கவிதை ஆவதில்லை என்று குறிப்பிட்டு,
"வித்தும் இடல் வேண்டும் கொல்லோ
விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்" (குறள் எண் 85)
என்கிற முட்டாள்தனம் கவிதை
ஆகி விடுகிறது என்கிறார்.
நோய்நாடி எனத் துவங்கும் குறளில் கவிதை
இல்லை என்கிறார். வித்தும் இடல் வேண்டும் என்ற குறளில் முட்டாள்தனம் இருக்கிறது என்கிறார்.
நோய்நாடி எனத் துவங்கும் குறளில் கவிதை
இருக்கிறது. அதை பிற குறள்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அதாவது திருக்குறளை ஒரு முழுமை
நோக்கில் முழுமையாகப் பார்த்தால் அது விளங்கிக் கொள்ளக் கூடியதே.
"இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து"
(குறள் எண் 1101)
என்ற குறட்பாவையும்,
"பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்கு தானே மருந்து" (குறள் எண் 1102)
என்ற குறட்பாவையும் ஒப்பு
நோக்கினால் நோய் நாடி எனத் துவங்கும் குறட்பாவின் கவிதைத் தன்மை விளங்கும்.
கவிதைத் தன்மை என்பது தனக்குள் தோன்றும்
கணப்பொழுதின் தீர்மானத்துக்குள் இல்லை. ஆழ்ந்து நோக்குவதின் மூலம் புலப்படக் கூடிய
கூறு. சில கவிதைகள் எளிதில் உணர்ச்சிவசப்பட வைத்து விடுகின்றன. சில கவிதைகள் யோசிக்க
யோசிக்க ஆழ்ந்த உணர்வைத் தருகின்றன. நோய் நாடி என்ற குறள் அப்படிப்பட்ட உள்அர்த்தப்பாடு
கொண்ட கவிதை. இசை அவர்களின் எதிர்பார்ப்பானது, படித்தவுடன் உணர்வைத் தர வல்லவைகளே
கவிதை என்பது போன்ற கோட்பாட்டிலானது.
வித்தும் இடல் வேண்டும் எனத் துவங்கும்
குறட்பா முட்டாள்தனம் என்பது போல இசை குறிப்பிட்டு இருப்பதும் ஏற்கத் தக்கதல்ல. அது
மானுடத்தனம்.
விருந்து என்ற சொல் புதுமை என்ற பொருள்படும்
புதிய மனிதர்களுக்கானது என்பதாகும். வள்ளுவர் குறிப்பிடும் விருந்தோம்பல் என்பது வீட்டில்
இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவுகள் மற்றும் சுற்றத்தாருக்குச் செய்யும்
விருந்தாக அல்லாமல், வீட்டிற்கு வரும் அறிமுகம் இல்லாத புதிய மனிதர்களுக்கான விருந்தோம்பல்
என்பதை நோக்க வேண்டும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நம்பிக்கையோடு
செல்லும் மனிதர்களுக்கான விருந்தோம்பலே வள்ளுவர் குறிப்பிடுவது. அப்படி ஒரு நம்பிக்கை
ஏற்பட்டு விட்டால் பிழைப்பிற்காக யாரும் பிற ஊர்களுக்குச் செல்லும் மாறி, சக மனிதர்களைக்
காணவும், பழகவும், பேசவும் பயணங்கள் செல்லும் நிலைமை ஏற்பட்டு விடும். பாரதியின் வரிகளில்
குறிப்பிடுவதென்றால் தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்ற நிலை ஏற்படாது. ஜகத்திற்கும்
அழிவில்லை.
யாருக்காகவும் யாரையும் அழிக்க வேண்டாத
ஜகத்தில் வித்தை இட்டு பொருள் பெருக்கம் செய்துதான் உண்ண வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
வித்து இடாமலே இயற்கையாக விளையும் உணவுப் பொருள்களே போதுமானதாக இருக்கும்.
மனிதன் வித்திட்டு உருவாக்கிய மித மிஞ்சிய
உணவுப் பெருக்கம் என்பது முடிவில் பசியிலும், பட்டினியிலும், போரிலும் சென்று முடிவது
வரலாறாகப் பின்தொடர்கிறது. மனிதர்களுக்குத் தேவை உணவுப் பெருக்கம் என்பதைக் காட்டிலும்,
மனதின் பெருக்கம் தேவை என்பதை அக்குறள் காட்டுகிறது. பரந்த மனதில் எழும் அன்பின் வெளிப்பாடு
அக்குறள்.
வித்திட்டு உருவாக்குவது காலத்தின், சூழ்நிலையின்
கட்டாயம் என்றாலும், அவ்வாறு உருவாக்குவது எல்லாம் யாவரும் உண்பதற்கே. வித்திட்டு நிறைய
உருவாக்கியவர்கள் விருந்தோம்பல் மூலம் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை மிக ஆழமாக அறத்தின்
குரலாக வெளிப்படுத்தும் மானுடத்தின் குரல் அக்குறள்.
உழவாண்மையைப் பொருட் பெருக்கமாகப் பார்க்காமல்,
உழவாண்மை மூலம் கிடைக்கும் செல்வப் பெருக்கத்தின் மூலம் தனிச்சொத்தையோ, தனி அதிகாரம்
கொண்ட அரசையோ முதன்மைபடுத்தி விடாமல் அப்பெருக்கமானது விருந்தோம்பல் மூலம் சிறப்பு
பெறுவதற்கானது என்கிறார் வள்ளுவர். வித்திடல் என்பது தனியுடைமைப் பெருக்கத்திற்கானதல்ல,
பொதுவுடைமைக்கானது என்பதை வழி வழியாகத் தொடரக் கூடிய ஒரு பண்பாட்டு கூறாக உருவாக்க
முயற்சி செய்கிறார் வள்ளுவர். வித்திடுவதன் நோக்கத்தை பரந்த உலகியல் மானுடத்திற்கானது
என்பதை உயர்த்திக் கூறும் அக்குறள் கவிதைத்தனமான முட்டாள்தனத்திற்குச் சான்று ஆகாது.
வித்திடும்போதே அது விருந்தோம்பலுக்கானது என்ற பரந்தக் கண்ணோட்டத்தோடு, மனதிம்
மானுடத் தன்மையோடு விதைக்கப்பட வேண்டும் என்று வள்ளுவர் விரும்புகிறார்.
விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலத்தில்
வித்திடாக் காரணத்தால் பட்டினியில் கிடப்பாரோ என்று ஐயப்பட வேண்டாம், அவரை விருந்தோம்பிக்
காக்க இந்த உலகில் ஒருவர் இல்லாமலா போய் விடுவார் என்பதுதான் அக்குறள் மூலம் வள்ளுவர்
காட்ட விரும்பும் நுண்பொருள் ஆகும்.
இன்றைய விளைநிலத்தை மனைநிலங்களாக ஆக்கும்
மனிதர்களுக்கு வேண்டுமானால் வித்தும் இடல் வேண்டும் கொல்லோ என்ற குறள் முட்டாள்தனமாக
இருக்கலாம். இசை போன்ற இனிய மனிதர்களுக்கு அக்குறள் முட்டாள்தனமாகத் தோன்றக் கூடாது.
*****
No comments:
Post a Comment