25 Jul 2017

முழுமையாக இயங்க வைத்தல்

முழுமையாக இயங்க வைத்தல்
            எஸ்.கே. வேலை பார்த்த அந்த அலுவலகத்தில் யாரும் அலுவலகம் முடியும் நேரம் வரை இருக்க மாட்டார்கள்.
            ஒரு சிலர் அரை மணி நேரத்திற்கு முன்பு கிளம்பி விடுவார்கள். ஒரு சிலர் பத்து நிமிடங்களுக்கு முன்பு கிளம்பி விடுவார்கள். அதில் ஓர் அல்ப சந்தோசம்.
            நாலரைக்கு முடியும் அலுவலகத்திற்கு நான்கு இருபதுக்கே கிளம்பி வெளியே போனால்தான் அவர்களுக்கு ஒரு திருப்தி. ஒரு கொசுறு சலுகையைப் போல் இதை அனுபவிப்பதில் அவர்களுக்குக் கொள்ளைப் பிரியம்.
            நாலரைக்கு முன் கிளம்பக் கூடாது என்று வெளிக்கதவைச் சாத்திப் பார்த்தார்கள். காம்பெளண்ட் ஏறி குதித்துப் போகுபவர்கள் போய்க் கொண்டே இருந்தார்கள்.
            நிர்வாகத்தின் சார்பில் மெமோ கொடுத்துப் பார்த்தார்கள். படிக்க முடியாத அளவுக்கு பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்தார்கள்.
            சம்பளத்தில் கை வைப்போம் என்று நிர்வாகம் மிரட்டியதையும் அவர்கள் பொருட்படுத்த மறுத்தார்கள். போராட்டம் நடத்தி எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
            எஸ்.கே.தான் அப்போது அந்த ஐடியாவை நிர்வாகத்தின் காதில் போட்டார். அலுவலகம் முடியும் நேரத்தை நாலரையிலிருந்து ஐந்தரையாக மாற்றச் சொன்னார். இந்த நேர மாற்றம் அமலுக்கு வந்தப் பிறகு, இப்போது ஒரு பிரிவினர் ஐந்து மணிக்கும், இன்னொரு பிரிவினர் ஐந்து இருபதுக்கும் செல்கின்றனர்.
            அதை நிர்வாகம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களின் இலக்கு நாலரை. அதைச் சாதித்து விட்ட திருப்தி. கூடுதலாக அரை மணி நேரம் வேலை பார்ப்பது அவர்களுக்கு எதிர்பார்க்காத லாபம்.
            இந்த யோசனையைக் கொடுத்த எஸ்.கே. இப்போது மேனேஜராக்கப்பட்டு இருக்கிறார். அடுத்து ஐந்தரை மணி வரை எல்லா தொழிலாளர்களை எப்படி பணியாற்ற வைப்பது என்ற டார்கெட்டை நிர்வாகம் எஸ்.கே.வசம் ஒப்படைத்திருக்கிறது. எஸ்.கே. என்னச் செய்யப் போகிறார்? சரியான விடை தெரிந்தவர்கள் ஒரு வரி எழுதிப் போடுங்கள்!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...