14 Jun 2017

சங்கப் பணியாளன் என் நண்பன்!


சங்கப் பணியாளன் என் நண்பன்!
            என் நண்பன் ஒருவன் அவன் பணியாற்றும் துறையில் சங்கச் செயலாளராகவோ, தலைவராகவோ இருக்கிறான். நெடுநாள்கள் வரை இந்த சங்கம், அங்கம், பங்கம் எல்லாம் வேண்டாம் என்று ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது போல் ஒதுங்கிதான் தெரிந்தான்.
            திடீரென்று ஒரு நாள் சந்தித்த போது அவன் சங்கத் தலைவரோ செயலாளரோ இருக்கும் ரகசியத்தை அவன் மனைவி போட்டு உடைத்து விட்டார். அவனுக்கு வெட்கமாகப் போய் விட்டது.
            "நான் பதவி எதுவும் வேண்டாம் என்றுதான் இருந்தேன், அவர்களாகப் பார்த்துத் தூக்கிக் கொடுத்து விட்டார்கள்!" என்றான். பதவி என்றால் இப்படித்தான் தேடி வர வேண்டும் என்றேன் நான்.
            அதற்கப்புறம் அவனுக்கு எப்போது செல்பேசி அழைப்பு விடுத்தாலும் "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் பிசியாக இருக்கிறார்!" என்று ஒரு பெண்குரல் கேட்க ஆரம்பித்தது. எனக்கோ அந்தப் பெண் குரல் மேல் கோபம். அவன் ஒரு சங்கத் தலைவர் அல்லது செயலாளர் என்பது தெரியாமல் அவனையும் ஒரு வாடிக்கையாளர் என்றா குறிப்பிடுவது என்று!
            எப்போதாவது பேச வாய்ப்பு கிடைக்கும் போது, "இப்போது முக்கியமான சங்கப் பணியை முடித்து கொண்டிருக்கிறேன், இன்னும் சில நாட்களில் ப்ரியாகி விடுவேன்!" என்பான். மறுபடியும் எப்போதாவது அழைத்துப் பேசினால் இதே வசனம்தான் அட்சரம் பிசகாமல் காதில் வந்து விழும்.
            அதாகப்பட்டது அவன், சங்கப் பணியை, அவன் சங்கத்தில் இருப்பவர்களுக்காக தன்னலமில்லாமல், நேரம் காலம் தெரியாமல் ‍உழைத்து ஆற்றிக் கொண்டிருக்கிறான். 
            ஆனால் எப்படிப்பட்டவர்களுக்காக அவன் உழைத்துக் கொண்டிருக்கிறான்? நேரம் காலமே தெரியாமல் எப்போதாவது வந்து நாற்காலியைத் தேய்த்து விட்டு, கொஞ்சம் கூட பொதுநலமில்லாமல், அட்டைப் பூச்சிகள் போல் உழைக்காமல் சம்பளத்தை மட்டும் உறிஞ்சிக் கொண்டிருக்கும் சங்க உறுப்பினர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறான்.
            உச்சி வெயிலில் நின்று, வியர்வை வழிய உழைத்து உழைத்து, உழைப்பிற்கேற்ற ஊதியம் பெற முடியாமல் எத்தனையோ ஏழை பாழைகள் தவிக்கிறார்களே இந்த நாட்டில்! அவர்களெல்லாம் அவன் கண்களுக்குப் பட மாட்டார்களா? அவர்களுக்காக அவன் சங்கம் ஆரம்பித்து உழைத்தால் நன்றாக இருக்கும்.
            இதை அவனுக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. என்றாவது ஒரு நாள் இந்த ப்ளாக்கைப் படிக்கும் போது தெரிந்து கொள்வான்.
            ஆனாலும், அவன் எனக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறான். குடும்பம், உறவு, நட்பு என்று எதுவும் கண்ணுக்குத் தெரியாமல் சங்கம் சங்கம் என்று அவன் ஓடி ஓடி உழைப்பதைப் பார்த்தால், நாற்பது வயதுக்கு மேல் சங்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்று எனக்கிருந்த எண்ணத்தில் அவன் மண்ணை அள்ளிப் போட்டு இருக்கிறான்.
            நமக்கெல்லாம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்தான் சரிபட்டு வரும்!
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...