4 Jun 2017

எதுக்கு ராசா இவ்வளவு பெரிய கட்டிடங்கள்?


எதுக்கு ராசா இவ்வளவு பெரிய கட்டிடங்கள்?
            ஒரு நிறுவனத்துக்கு எத்தனை கிளைகள்?
                                    எத்தனை தொழில்கள்?
                                    எவ்வளவு லாபங்கள்?
                                    எத்தனை கட்டிடங்கள்?
மினுக்கித் திரியும் நகைகளை விற்பதற்கும், பேஷன் காட்டி டிசைனாய் உடுத்தும் ஆடைகளை விற்பதற்கும், வறட்டுக் கெளரவத்தைக் காட்டும் பரிசுப் பொருள்களை விற்பதற்கும் இவ்வளவு பெரிய கட்டிடங்கள் என்றால், விவசாய விளைபொருள்களைக் காக்க, சேமிக்க, பராமரிக்க இந்தக் கட்டிடத்தில் பத்தில் ஒரு பங்குக்  அளவுக்குக் கூட ஒரு கட்டிடமும் இல்லையே இந்த நாட்டில்.
நானே நகை விற்பேன், நானே துணி விற்பேன், நானே பரிசுப் பொருள்களை விற்பேன் என்று மூன்று வகையான வியாபாரிகளின் வயிற்றில் அடித்து, பிரமாண்ட உலகைப் படைக்கிறேன் என்று நான்கு மாடிகளுக்கு அனுமதி வாங்கி, 8 மாடிகளைக் கட்டிக் கொண்டு விதிமுறைகளை மீறி, வரைமுறை இல்லாமல் வியாபாரம் செய்து சம்பாதிப்பதில் அவர்களுக்கு எப்படி என்ன ஆனந்தமோ?
அப்படிச் சம்பாதித்து ஒரு நாளுக்கு மூன்று வேளைக்குப் பதில் பத்து வேளைகள் சாப்பிடுகிறார்களா? ஒரு ஆடை அணிவதற்குப் பதில் இருபது முப்பது ஆடைகளை ஒன்றன் மேல் அணிந்து கொள்கிறார்களா? மாடி மாடி மேல் மாடி கட்டி அத்தனை மாடிகளிலும் குடித்தனம் நடத்துகிறார்களா?
ஏழைகளாய்ப் பார்த்து 700 பேருக்கு வேலை கொடுக்கிறேன் என்று பெயரில் நாள் முழுதும் அவர்களை உறிஞ்சு எடுத்து, ஏழாயிரம் பேர்கள் பார்க்க வேண்டிய தொழில் வாய்ப்புகளைப் பறித்து சர்வ நாசம் செய்யும் இவர்களின் அட்டகாசங்களுக்கு கணக்குதான் உண்டா?
தொழில் முனைவோர் என்ற பெயரைப் பயன்படுத்தி அத்துமீறல்களும், அதிகப் பிரசங்கித்தனங்களும் செய்து, ஊழல் கரங்களை உயர்த்தி, லஞ்ச சிறகுகளை விரித்து, விதிமுறைகளின் குரல்வளையை நெரித்து இந்த பணமுதலைகள் செய்யும் அக்கிரமங்களின் அனுகிரகங்கள்தான் அடங்காதா?
நமது நாட்டுக்குத் தேவை எளிய பொருளாதாரம்தான், வலியைத் தரும் இது போன்ற வலியப் பொருளாதாரம் அல்ல. உணர்வார்களா?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...