விவசாயிகள் எனும் பலிகடாக்கள்
மத்தியப் பிரதேசத்தில் போலீசார் சுட்டு
5 விவசாயிகள் பலி என்ற செய்தியைப் பார்த்தீர்களா?
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவது
போதாது என்று இவர்கள் வேறு துப்பாக்கியால் சுட்டுச் சாகடிக்கிறார்கள்.
காவலர் என்ற சொல்லானது அழிப்பதற்கு எதிராகக்
காப்பவர் என்ற பொருளைத் தரும். நடைமுறையில் அவர்கள் காப்பதற்கு எதிராக அழிக்கும் செயலைச்
செய்கிறார்கள்.
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்? என்று
கிராமத்தில் சொல்வார்களே. போலீஸ்காரர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்? விவசாயிகளை
எல்லாரும்தான் சாகடிக்கிறார்கள். விவசாயக் கொள்கைகள், கார்ப்ரேட் வணிகம், கந்து வட்டி
கொடுமைகள், தடலாலடியாகக் கடன் வசூலிக்கும் வங்கிகள், இரசாயன வேளாண்மை, வீரிய ரக வித்தில்லா
வேளாண்மை என்று விவசாயிகளை எல்லாரும், எல்லாமும் சாகடிக்கின்றன. இதில் போலீஸ்காரர்களை
மட்டும் குற்றம் சாட்டி என்ன பிரயோஜனம்? ஏதோ அவர்கள் பங்குக்கு தங்களால் முடிந்த
அளவுக்கு விவசாயிகளுக்கு கபால மோட்சம் கொடுக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டால்தான்
இந்த நாட்டில் கண் முன் அழியும் விவசாயிகளைப் பார்த்துக் கொண்டு நெஞ்சு வெடிக்காமல்
வாழ முடியும்!
வாடிய பயிரைக் கண்டே வாடிய வள்ளலார், இப்படித்
துப்பாக்கிச் சூட்டில் இறக்கும் விவசாயிகளைக் கண்டால் என்ன செய்திருப்பார்?! ஒரு துப்பாக்கியை
எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டிருப்பாரா? அல்லது விவசாயிகளுக்கு எதிரானவர்களைச்
சுட்டுக் கொண்டிருப்பாரா?
*****
No comments:
Post a Comment