6 Jun 2017

கிளைகளைக் கழிக்காமல், வேர்களை வெட்டுங்கள்!


கிளைகளைக் கழிக்காமல், வேர்களை வெட்டுங்கள்!
            நமக்குக் கிளைகளைக் கழிப்பதுதான் வசதியாக இருக்கிறது. வேரை அழிப்பதற்கு அசதியாக இருக்கிறது. தீவிரவாதத்தின் வேரை வேரறுக்காமல், கிளைகளைக் கழித்துக் கொண்டே இருந்தால், அது வேர் விட்டுப் பரவிக் கொண்டே, கிளை பரப்பிக் கொண்டேதான் இருக்கும். தீவிரவாதத்தின் ஆணி வேர் வறுமையும், இழிவும்தான்.
            லண்டனில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்புகின்றன.
            உலகப் பொருளாதாரச் சமனின்மையை இன்னும் எத்தனை காலம்தான் வளர்ந்த நாடுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கப் போகின்றன?
            பெருநிறுவனப் பிடிகளிலேயே அரசுகள் இன்னும் எத்தனை காலங்கள்தான் இருக்கப் போகின்றன? சாமான்யர்களுக்கான அரசு என்பது சாத்தியமே இல்லையா?
            முதலீடுகளுக்கு முக்கியத்துவம் தரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாட்சிகள் எப்போது வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் தரப் போகின்றன?
            மத ரீதியாகவும், இன ரீதியாகவும் மக்களைப் பிரித்துப் பார்ப்பதை இன்னும் எத்தனை காலம்தான் சுதந்திரத்தின் பெயரால், சமத்துவத்தின் பெயரால் பதவியேற்றுக் கொண்ட அரசுகள் வெறுமனே பார்த்துக் கொண்டே இருக்கப் போகின்றன?
            மத அடிப்படைவாதம் உருவாகக் காரணம் பொருளாதார தடை விதிப்புகளும், வளங்களைச் சுரண்டுவதற்காக நடத்தப்படும் போலியான போர்க் காரணங்களுமே என்பதை எப்போதுதான் வல்லரசு நாடுகள் உணரப் போகின்றன?
            மக்கள் விரும்புவது அடிப்படைத் தேவைகளோடு உழைத்துப் பொருளீட்ட போதிய வாய்ப்புகளும், போதிய ஓய்வோடு கொஞ்சம் பொழுதுபோக்கும்தான். அதைத் தருவதற்கு இன்றைய தொழில்நுட்ப, தகவல் தொடர்பு உலகில் தடையுளதோ?
            தீவிரவாதத்துக்கு, எதிர் நிலையிலான தீவிரவாதம் தீர்வாகாது. அன்பும், அரவணைப்பும்தான் அதற்கான தீர்வு.
            வறுமைக்கும், இழிவுக்கும் ஆட்படும் மக்கள் அன்போடும், அடிப்படைத் தேவைகளோடும் அரவணைக்கப்பட்டால் உலகம் தழைக்கும். இல்லாவிடில் தீவிரவாதம்தான் முளைக்கும்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...