நிறைய படித்தால் சட்டையைக் கிழித்துக்
கொள்வாய்!
நீட் தேர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?
என்று கேட்டார் நண்பர் ஒருவர். ப்ளஸ்டூ முடித்த பிறகு மருத்துவ படிப்புப் படிக்க எழுதும்
நுழைவுத் தேர்வு என்றேன் நான்.
அது எனக்குத் தெரியாதா? அதைக் கேட்கவில்லை,
அந்தத் தேர்வு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று மேலும் கேட்டார்.
மருத்துவத்துக்கு ஒரு நுழைவுத் தேர்வு,
பொறியியலுக்கு ஒரு நுழைவுத் தேர்வு, வேளாண் படிப்புக்கு ஒரு நுழைவுத் தேர்வு, கால்நடை
மருத்துவப் படிப்புக்கு ஒரு நுழைவுத் தேர்வு என்று பல நுழைவுத் தேர்வு இருப்பதாக கேள்விபட்டு
இருக்கிறேன். அப்படியில்லாமல் யு.பி.எஸ்.சி. தேர்வு போல ஒரே தேர்வு வைத்து அதில் பெறும்
மதிப்பெண்களைக் கொண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,கஸ்டம்ஸ் என்று பல வித பணிகளுக்கும் தேர்வு
செய்வது போல பனிரெண்டாம் வகுப்பு முடித்தால் எல்லாவற்றிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு
என்று வைத்தால் நன்றாக இருக்கும் என்றேன்.
நீட் தேர்வு எழுதுவதற்காகச் சென்றவர்கள்
முழுக்கைச் சட்டையை அரைக்கை சட்டையாகக் கிழித்துக் கொண்டதையெல்லாம் பார்த்தீர்களா?
என்றார்.
ம்ஹூம்! இந்தத் தேர்வுக்காக ரொம்ப படித்தால்
சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைய வேண்டியதுதான் போலிருக்கிறது என்றேன்.
நான் என் பிள்ளையை இப்போதிலேர்ந்தே நீட்
தேர்வுக்கு தயார் செய்யப் போகிறேன் என்றார் நண்பர்.
அவரின் பிள்ளை இப்போதுதான் ஜீனியர் எல்.கே.ஜி.
முடித்து விட்டு எல்.கே.ஜி. படிக்கப் போகிறது. அந்தப் பிள்ளை நீட் தேர்வு எழுத வரும்
போதெல்லாம் முழு சட்டையையுமே கிழித்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.
*****
No comments:
Post a Comment