கேணிக்கரை நிறுத்தம்
எங்காவது ஒரு இடத்தில்
நிறுத்தித்தான் ஆக வேண்டும்
நிறுத்தாமல் தொடர்வதற்கில்லை
நிறுத்தியதும் பல நேரங்களில்
தொடர்வதற்கில்லை
பனிரெண்டு வருடங்களாக
வேலை தேடி அலைந்து கொண்டிருந்த
கருப்பையன் எம்.ஏ., பி.எட்.,
ஒரு நாள் அதை நிறுத்திக்
கொண்டார்.
பக்கவாதம் வந்து இழுத்துக்
கொண்டதும்
கீரை விற்கும் பாட்டி
அதற்கு மேல் செய்வதற்கு
எதுவுமில்லாமல் நிறுத்திக் கொண்டார்.
ஓய்வுப் பெற்றதும்
ப்யூன் வேலைக்குப் போய்க்
கொண்டிருந்த
மூக்கையன் திண்ணைக்குள்
முடங்கிக் கொண்டார்.
இனி இந்த ரெப் வேலை வேலைக்கு
ஆகாது என்று
முதுகு வலி வந்ததும்
அந்தோணி அண்ணன் நிறுத்திக்
கொண்டது.
முகூர்த்த ஓலை எழுதிய
நாள் முதல்
கம்ப்யூட்டர் கிளாஸ்
போய்க் கொண்டிருந்த
சம்ரிதா அக்காவும் அதை
நிறுத்திக் கொண்டது.
அவர்கள் நிறுத்திக் கொள்ள
மற்றவர்களின்
பயணங்கள் தொடர்கின்றன
அவர்களின் பயணங்களும்
ஒரு நாள் நிற்கக் கூடும்
எவ்வித நிறுத்தமும் இல்லாமல்
தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருப்பது
கேணிக்கரை அழிந்த பிறகும்
அதன் பெயர் தாங்கிய
அந்தப் பேருந்து நிறுத்தம்
மட்டுமே.
*****
No comments:
Post a Comment