3 Jun 2017

எரிந்தால் எரியட்டும் போடா என்பதா?


எரிந்தால் எரியட்டும் போடா என்பதா?
            ஏழு மாடிக் கட்டிடம் சென்னை சில்க்ஸ் பற்றி எரிந்து விட்டது. ஏழேழ் ஜென்மத்துக்கு மறக்க முடியாத தீ விபத்து.
திடீரென்று தீ பிடித்தால் அதை அணைக்க முடியாத அளவுக்கு கட்டிடங்கள்.
தீயணைப்பு வாகனங்கள் தீ பிடித்த கட்டிடத்தை விரைவில் நெருங்க முடியாத அளவுக்கு சாலை அமைப்புகள்.
பேரிடர்களை வேடிக்கைப் பார்க்கத்தான் முடிகிறது அதுவும் ஒரு பிரேக்கிங் நியூஸ் என்பது போல.
வந்ததும், போனதும் தெரியாமல் போகும் சுனாமி போன்ற வகையிலான பேரிடரா இது என்றால் அதுவும் இல்லை. கண்முன்னே பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் பேரிடர்களின் வடிவங்களாகத்தான் தி.நகரின் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் தெரிகின்றன. ஐந்து மாடி பிரமாண்டம், ஏழடுக்கு மாளிகை, பத்தடுக்கு உலகம் என்று தொலைக்காட்சியைத் திறந்தால் அந்த கட்டிடங்கள் குறித்த விளம்பரங்கள் கப்பு அடிக்கின்றன. ஆனால் அசாம்பாவிதம் நடந்து தீ பிடித்தால், தீயை அணைத்து முடிக்க முப்பத்தைந்து மணி நேரங்கள் தேவைப்படுகின்றது. தீயை அணைத்து முடித்தாலும் சுவர்கள் கண்ணி வெடிகளைப் போல வெடித்துச் சிதறுகின்றன.
நமக்கோ விபத்துகள் நடந்தால்தான் அது குறித்து சிந்திக்கும் மனசு. அது வரைக்கும் அதன் முதல் தளத்திலிருந்து, மேல் தளம் வரை நாள் முழுக்க பர்சேஸ் செய்யும் பேரார்வம் படைத்த பிசாசுகள் நாம்.
            வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
            வைத்தூறு போலக் கெடும்.
                        என என்ன நோக்கில் வள்ளுவர் தீ முன்னர் கெடுவது போல முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாவிட்டால் கெடும் என்று கூறினாரோ தெரியவில்லை, தீ முன்னர் கெட்டு விட்டது சென்னை சில்க்ஸ்.
வெள்ளை வேட்டியும் சட்டையும் உடுத்திய பெரிய மனிதர்கள் மனசு வைத்தால் மாற்றம் வரும். அதுவரை நாம் என்ன செய்வது? புலம்பல்கள்தான் நம் தனியுடைமை என்று "இறைவா! இயற்கைப் பேரிடர்களிலிருந்து எங்களைக் காப்பது போல, இது போன்ற செயற்கைப் பேரிடர்களிடமிருந்தும் எங்களைக் காப்பாயாக!" என புலம்பிக் கொள்ள வேண்டியதுதான்.
அதிசயமாக இந்த விபத்தானது மனிதர்கள் இல்லாத நேரத்தில் தீ பிடித்து மனிதர்களை பலி கொள்ளாமல் விட்டது தி.நகர் செய்த புண்ணியம்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...