கல்வித்தந்தையின் பதில்
அந்த கல்வித்தந்தையின் மனைவி ரொம்பவும்
கவலைபட்டார். அந்தக் கவலையிலே துரும்பாக இளைத்துக் கொண்டு போனார்.
கல்வித்தந்தையும் தலைசிறந்த மருத்துவர்களைக்
கொண்டு மனைவிக்கு வைத்தியம் செய்து பார்த்தார். ஒன்றும் உருப்படுகிற மாதிரி தெரியவில்லை.
மருத்துவம் செய்ய செய்ய இன்னும் மெலிந்து கொண்டு போனார்.
மனம் விட்டு பேசிப் பார்த்தால் பயனுண்டு
என்று வந்தவர்கள், போனவர்கள் சொல்ல அதையும் முயற்சித்துப் பார்த்து விடுவோமே முதன்
முதலாக மனதில் உள்ளதை மனைவியிடம் வெளிப்படையாகப் பேசத் தயாரானார் கல்வித்தந்தை.
"உன் மனசுல உன்னைப் போட்டு அரிச்சுகிட்டு
இருக்கிற எதையோ ஒண்ணை என்கிட்ட மறைக்கிறே. அதனால்தான் நீ இப்படி இளைச்சுகிட்டே போறே?"
நேரடியாகவே மனைவியிடம் ஆரம்பித்தார் கல்வித்தந்தை.
மனைவிக்கு இவரை நம்பி கவலையைச் சொல்லலாமா,
வேண்டாமா என்ற தயக்கம் அப்பட்டமாய் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது.
"எதுவா இருந்தாலும் பயப்படாம சொல்லு.
நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்!" அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தார் கல்வித்தந்தை.
"நம்ம பையன் சரியா படிக்க மாட்டேங்றான்.
அதை நினைச்சுதான் ரொம்ப கவலையா இருக்கு!" என்றார் மனைவி.
கல்வித்தந்தை கெக்கெபிக்கேயென்று சிரிக்க
ஆரம்பித்து விட்டார். "நம்ம பிள்ளை படிக்கலைன்னு கவலைப்படாதே!" என்றார்.
"கவலைப்படாம என்ன பண்றதாம்?"
வெள்ளந்தியாகக் கேட்டார் மனைவி.
"படிச்சா வேலைக்குத்தான் போவான்.
பத்து பதினைஞ்சு காலேஜ்களை கட்டி மேய்க்குற திறமை வராது! அவனுக்குப் படிப்பு வராம இருக்கிறதும்
நல்லதுக்குதான்!" என்றால் கல்வித்தந்தை செம கூலாக.
*****
No comments:
Post a Comment