2 Jun 2017

தஞ்சை பிரகாஷின் மீனின் சிறகுகள்


தஞ்சை பிரகாஷின் மீனின் சிறகுகள்
            தஞ்சை பிரகாஷ் எழுதியுள்ள மீனின் சிறகுகள் என்ற நாவலை அண்மையில் படித்தேன். குறிப்பாக சோரம் போதலின் பல்வேறு வகைகளை உள்ளடக்கிய நாவல் எனலாம். அதை வெகு சுவாரசியமாக செய்திருக்கிறார் பிரகாஷ்.
            நாவலின் மன்மதக் குஞ்சு ரங்கமணி பெண்களைச் சுற்றுகிறானா? பெண்கள் ரங்கமணியைச் சுற்றுகிறார்களா? என்ற ஊடாட்டம் நாவல் முழுதும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கிறது.
            மஞ்சள் பத்திரிகைள் கிளர்ச்சியூட்டிய கதைகள், இணைய வழிக் காமக்கதைகள், ரகசியமாய்ச் செவிவழி அறியப்பட்ட அந்தரங்கக் கதைகள் என்று ஒதுக்கப்பட்ட பிரதேசத்தைத்தான் பிரகாஷ் தனக்கான புனைவியல் களமாக்கி அதை தனக்கே உரிய தத்துவார்த்த நடையில் நாவல் இலக்கியமாக புனைந்திருக்கிறார்.
            உடலின் பசி தேடி அலையும் மனிதர்கள் மனதின் பசி பற்றியும் ஆழமாக விவாதிக்கிறார்கள். உடலின் பசியை மறைக்க விரும்பாமல் தெரிந்தே ஏமாறுகிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை நாவல் தரலாம். ரங்கமணியும் ஏமாறுகிறான் என்பது போல தோற்றத்தை நாவல் தருவதை ஏற்றுக்கொள்வது அவரவர் அபிப்ராயம்.
            இந்த நாவலைப் படித்துக் கொண்டிருந்த நாள்களில் நண்பர்கள் கேட்டார்கள், "இதை நீ எப்படிப் பார்க்கிறாய்?" என்று. பிருந்தாவன கிருஷ்ணனையும், கோபியர்களையும் மீட்டுருவாக்கம் செய்தது போல்தான் இந்த நாவல் தோற்றம் தருவதாகக் குறிப்பிட்டேன்.
            நாவலின் அத்தியாயம் தோறும் சொட்டும் காமரசத்தைப் பிடிக்க சாடிகளோ, பாத்திரங்களோ போதாது. அது பொழிந்து கொண்டும், வழிந்து கொண்டும் இருக்கிறது.
            அவரவர் உலகம், அவரவல் காமத் தேவைகள், எல்லை மீறிய புணர்வுகள், உறவு மீறிய புணர்வுகள், வயது மீறிய புணர்வுகள் என்று ஏகப்பட்ட விசாரணைகள் நாவலில் உண்டு. கைக்கிளை போன்ற ஒருதலைக்காமமும், பெருந்திணை போன்ற பொருந்தாக் காமமும், இறுதியில் எல்லாம் கையறு நிலையில் முடிவதும் நாவல் சொல்லும் காஞ்சித் திணைச் சார்ந்த கருத்துகள் எனலாம்.
            தஞ்சை மண்ணை நிலைக்களனாகக் கொண்டு நிகழ்வதால் மருதத்திணைக்கே உரிய உரிப்பொருள் நாவல் நெடுக அநேகம். மருத்திணைக்கே உரிய பரத்தமை அதிகமோ அதிகம். இந்நாவல் அதன் உள் ஆழங்களையெல்லாம் வேறொரு பரிமாணத்தில் நின்று மேலும் ஆழமாகத் தோண்டி வெளியில் எடுத்துப் போடுகிறது. மனதின் உள்ஆழங்களைத் தோண்டிப் பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். மிகவும் அருவருப்பாகத் தோன்றினால் தோண்டாமல் இருப்பதே உத்தமம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இந்நாவலைப் படிப்பதா, வேண்டாமா என்பது கூட அப்படி ஒரு முடிவின் பாற்பட்டதே.
            என்ன ஒன்று... பெருமாள் ஸ்டோர் பெண்களைப் பெருமாளாலே காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் சோகம்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...