பலி
சாலையோரத்தில் அடிபட்டுக்
கிடந்த
கசங்கிய துணியைப் போன்ற
நாய்குட்டிக்காகப் பணிவிடைகள்
செய்து
பனி விழும் இரவு முழுவதும்
கண்களால் கண்ணீர் சிந்தி
காலையில் உறங்கி எழுந்தவள்
நாய்க்குட்டிக்குத் தூய
வெண்ணிற பால் வைத்து
நிதானமாக வருடிக் கொடுத்து
அவசர அவசரமாக அலுவலகம்
கிளம்பி
நண்பகலுக்குள் பலியாகியிருந்தாள்
ஒரு தலைக் காதலுக்குப்
படையலாக.
*****
புரோகிராம்
வரிசையாக வரும் மூன்று
நாள் விடுமுறையில்
வானை அளப்பேன்
வண்ணத்துப் பூச்சிகளோடு
விளையாடுவேன்
ரயில் விடுவேன்
விமானம் ஓட்டுவேன்
மிஸ் போல் நடித்துப்
பார்ப்பேன்
பூனைக்குட்டியை மடியில்
வைத்துக் கொஞ்சுவேன்
பாட்டி மடியில் என்னை
வைத்துக் கொஞ்சுவாள்
தாத்தா சீனா கற்கண்டு
வாங்கித் தருவார்
நான் தாத்தாவிற்கு கண்ணில்
சொட்டு மருந்து விடுவேன்
அப்பாவிடமும், அம்மாவிடமும்
சொல்லி விட்டு
பிள்ளைகளோடு சேர்ந்து
ஊர் சுற்றி வருவேன்
அடுத்த ஐந்து நாள்கள்
தொடங்கம் பள்ளியில்
சொன்னபடி கேட்டு அடங்கி
நடப்பேன்
புரோகிராம் செய்யப்பட்ட
ரோபோ போல நல்ல பிள்ளையாய்.
*****
No comments:
Post a Comment