21 May 2017

யோசனையிலேயே முடிந்து விடுமோ அரசியல் பிரவேசம்?!


யோசனையிலேயே முடிந்து விடுமோ அரசியல் பிரவேசம்?!
            ஒரு வழியாக தமிழின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் நாட்டில் அரசியல் கட்டமைப்பு சரியில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு வாக்கில் அவர் அரசியல் குரல் கொடுத்ததைப் போல் தற்போது அவர் எந்த குரலையும் கொடுக்க விரும்பவில்லை. இந்த கட்டமைப்பு இப்படியே இருக்கட்டும், போர் மூண்டால் அதில் இறங்குவது பற்றி சிந்திப்போம் என்று சூசகம் காட்டியுள்ளார்.
            இந்த இடத்தில் புரட்சித் தளபதி விஷாலை நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இவைகளின் கட்டமைப்பு சரியில்லை என்று கூறியதோடு நின்று விடாமல் அதில் அரசியல் களம் கண்டார். பொறுப்புகளுக்கும் வந்தார். இப்படிப்பட்ட ஒரு தன்மையை ரஜினியிடம் காண முடியவில்லை. அவர் அவ்வபோது மிக சாமர்த்தியமான பதிலைத் தருகிறார். அவரது சாமர்த்தியத்தையும் தாண்டி அவரது பதில்கள் சமயங்களில் சர்ச்சையாவது வேறு விசயம்.
            அவரது பதில்களில் மற்றொரு அம்சம், இந்த முறை பெரும்பாலான அரசியல்வாதிகளைப் பாராட்டியுள்ளார்.
            ஸ்டாலின்,
            அன்புமணி,
            திருமா,
            சீமான் என்று பலரையும் ஒவ்வொருவரின் சிறப்பான தன்மைகளுக்காகப் பாராட்டியுள்ளார்.
            வை.கோ.வைப் பாராட்டியுள்ளாரா? அல்லது விடுத்துள்ளாரா? என்பது தெரியவில்லை. விடுத்துள்ளார் என்றால் அவர் ஜெயிலில் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
            அதே நேரத்தில் அவர் தற்போதைய ஆளுங்கட்சியைச் சார்ந்த யாரையும் பாராட்டவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை மிரட்டல், அச்சுறுத்தல் ஏதேனும் நேர்ந்தால் தனது பாராட்டுப் பட்டியலை அவர் விரிவுபடுத்திக் கொள்ளக் கூடும்.
            ரஜினி நிச்சயமாக உணர்ந்திருக்கிறார், அரசியல் என்பது ஒரு சினிமா படம் எடுப்பது போல அல்ல. அவரது பெரும்பாலான திரைப்படங்கள் போல திடீரென வீழ்ந்து திடீரென உச்சம் காணும் அதிர்ஷ்ட விளையாட்டு அல்ல அரசியல். இங்கு அவர் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
            தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போய், நாட்டு மக்களைக் காப்பாற்றாமல் போனவர்களும், நாட்டு மக்களைக் காப்பாற்றப் போய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாமல் போனவர்களும் இங்கு அதிகம்.
            ரஜினி அது குறித்துதான் அதிகம் யோசிக்கிறார்.
            அவர் யோசிப்பது நல்லதுதான். என்ன ஒன்று, அவரது யோசனையிலேயே அவரது அரசியல் பிரவேசம் முடிந்து விடுமோ என்று தமிழ் நாட்டுக்கே ஐயமாக இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...