சகிப்பின் தருணங்கள்
தனக்கான லெக் பீஸைத்
தேடிய பிரியாணியில்
அது இன்னொருவன் தட்டில்
இருப்பதைப் பார்த்து
பொறுத்துக் கொண்டு
சகிப்புடன் போகிறது
காலை டாய்லெட் கிடைக்காமையும்
குடிநீர் சரியான நேரத்தில்
வந்து சேராததையும்
காத்திருந்து நெடுநேரமாய்
வராத பேருந்தையும்
சில்லரைத் தராத விரக்தியில்
பாதி ஸ்டாப்பிங்கிலேயே
நடத்துநர் இறக்கி விட்டதையும்
காதல் சொல்லப் போன
இடத்தில்
பிட்டத்திற்குப் பின்னே
பேண்ட் கிழிந்துப் போனதையும்
பொறுத்துக் கொண்ட அதே
மனசு.
*****
உடன்போக்கு
சரளைக் கற்கள் குத்தும்
பாறைகள் இல்லை
சரளைக் கற்கள் மீது போடப்பட்ட
பாதையில்
சென்று கொண்டிருக்கிறது
ரயில்
சொகுசானப் பயணத்தின்
சாத்தியத்தில்
மனதுக்குப் பிடித்தவனோடு
நிகழ்ந்து கொண்டிருக்கும்
இந்த உடன்போக்கு
இன்னும் ஒரு பகல், இன்னும்
ஒரு இரவில்
மும்பையில் நிறைவு பெற
சொகுசான மாளிகையில்
பல தினுசாக வாழ்ந்த வாழ்க்கையினும்
இனிதான எம் காதல் வாழ்வு
தாராவியின் சிறு குடிசையில்
தொடங்க இருப்பதை அறியாது
எம் தாயும் தந்தையரும்
புலம்பிக் கொண்டு இருப்பர்
பி.பி. மாத்திரைகளும்,
ஏ.சி. குளிரும் சகிதமாக கண்ணீரோடு.
*****
No comments:
Post a Comment