ஊர்ப் புராணம்
தூர்ந்துப் போன கிணற்றின்
அடையாளமாக
ஒரு மின்கம்பம் நிற்கிறது
அதன் ஒட்டுமொத்த நீரையும்
உறிஞ்சி வளர்ந்தது போல.
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்
இருந்த
பேயும், பிசாசும் வசிப்பதாகக்
கூறப்பட்ட புளியமரம் வெட்டப்பட்டு
அங்கே அபார்ட்மெண்ட்
கட்டி வசிக்கத் தொடங்கி விட்டனர்
பேய் போன்று வாகனங்களில்
அலையும் மனிதர்கள்.
ஊருக்கு அடையாளமாக பக்திப்
பெருக்கோடு இருந்த
மாரியம்மனின் கோயில்
நேர் எதிரே
மற்றொரு அடையாளமாக
டாஸ்மாக் கடையொன்று
இருக்கிறது போதைப் பெருக்கோடு.
பஞ்சம் பிழைக்க வந்து
தங்கிய கிராமத்தில் இன்று
வீட்டிற்கு ஒருவராவது
வெளிநாட்டில் சென்று
வேலை பார்த்து வந்து
வளம் சேர்க்கின்றனர்.
திண்ணைப் பள்ளிக்குப்
பிள்ளைகள் போய் வந்த
காலம் மாறி பள்ளி வேன்கள்
வலம் வந்து
காலையில் பிள்ளைகளைப்
பிடித்துக் கொண்டு சென்று
மாலையில் விட்டு விட்டுப்
போகின்றன
தீப்பெட்டி பெட்டிகளைப்
போல.
ஊரின் அம்சமாய் இருக்கும்
சாதியத் திமிரும், சாதீய
கட்டுபாடு மட்டும்
சேட்டிலைட் கண்களிலிருந்து
தப்பி
பேஸ்புக், வாட்ஸ் அப்
குரூப்புகளாய்
ஊர்த்தெருக்களைக் கடந்து
உலகம் பூராவும்
கார்பன் மோனாக்சைடும்,
கார்பன் டெட்ரா குளோரைடு போலவும்
உலவிக் கொண்டு இருக்கின்றன.
*****
No comments:
Post a Comment