23 May 2017

பாகுபலி - 2


பாகுபலி - 2
            பாகுபலி-2 பார்த்தேன்.
            படம் நீளமாகத்தான் இருக்கிறது.
            முதல் பாகத்திலிருந்து இரண்டாம் பாகம் வரை படத்தில் கொலைகள் அதிகம். அந்தக் கொலைகளில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வி அதிமுக்கியம் பெற்றக் கேள்வி. கொலைக்கார படத்தில் கொலைகள்தானே செய்வார்கள்.
            பாகுபலி பட சண்டைகளில் பறந்து பறந்து பாய்ந்து பாய்ந்து அடிப்பது பயங்கர வகை. அதுவும் பனைமரத்தை உண்டி வில் கணக்காய்ப் பயன்படுத்தி அதிலிருந்து பறந்து மதில் மேல் வீரர்கள் பாய்ந்து செல்வதெல்லாம் உயிர்க் கூச்செறியச் செய்கிறது.          விழுந்தால் எலும்பு தேறுமா?
            தமன்னா சில காட்சிகள்தான் வருகிறார் என்பது இளைஞர்களுக்குக் குறையாக இருக்கக் கூடாது என்று அந்த இடத்தை ஈடுகட்டும் அனுஷ்கா பாராட்டிற்குரியவர்.
            கட்டப்பாவும், பல்வாள்தேவனின் தந்தையும் முடிகளை வெள்ளையாக்கிக் கொண்டு மகேந்திர பாகுபலி காலம் வரை வாழ்கிறார்கள். மகிழ்மதி நாட்டு குடிமக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகம்.
            கிராபிக்ஸில் ஆட்சி நடத்தும் மன்னன் பாகுபலி. அவனிடம் லாஜிக்கைக் கேட்க முடியாது. கேட்டால் தேரை தனி ஒரு ஆளாக இழுத்து நடுவே விட்டு விடுவான். பாகுபலி மற்றும் பல்வாள்தேவன்களின் அடிகளில் இரும்பு நொறுங்கி தப்பித்துக் கொள்வது இரும்பு செய்த புண்ணியம்.
            கன்னட அமைப்புகளிடம் கட்டப்பாவான சத்தியராஜ் மன்னிப்பு கேட்காமல், கர்நாடகத்தில் படமே வெளியாகா விட்டாலும் படம் பிரமாண்ட வெற்றி பெறும் என்று முன்பே எழுதியிருந்தேன். ஆயிரம் கோடி வசூலைத் தாண்டி அது நிரூபணமாயிருக்கிறது.
            பாகுபலியை கட்டப்பாவின் படமாகப் பார்த்த கன்னட அமைப்புகளை என்ன சொல்வது? அதற்காகவேனும் கன்னடத்தில் பாகுபலி என்ற பெயரில் அல்லாமல் கட்டப்பா என்ற பெயரில் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் பாகுபலி என்ற பெயரில் வெளியாகி ஒரு தமிழனின் தன்மானத்தைப் பலி கொண்டதுதான் படத்தின் மிச்சம். விசுவாசமான இராஜ அடிமையான கட்டப்பா என்ன செய்வான் பாவம்?! அவனைக் கொலை செய்யச் சொன்னாலும் செய்வான், மன்னிப்பு கேட்கச் சொன்னாலும் கேட்பான்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...